model image x page
இந்தியா

இந்தியாவில் அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்.. காரணம் என்ன?

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட NCLP திட்டம் முடக்கப்பட்டதால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது தரவுகள் மூலம் தெரிய வருகிறது.

PT WEB

ந.பால வெற்றிவேல்

உலகில் மொத்தம் 16 கோடி குழந்தை தொழிலாளர்கள் உள்ளதாக ஒரு தரவு தெரிவிக்கிறது. 2000 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை உலக அளவில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் கடந்த 4 வருடத்தில் 17.6 கோடியாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதும் 9 கோடி குழந்தைகள், தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதில் 3 கோடி குழந்தைகள் அபாயகரமான தொழிற்சாலைகளிலும், பாலியல் தொழிலும் ஈடுபடுத்தபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் 1.2 கோடி குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். அதில் 65 லட்சம் ஆண் குழந்தைகளும், 55 லட்சம் பெண் குழந்தைகள் அடங்குவர். உத்தரபிரதேசம்,மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள், தொழிலாளர்களாக மாற்றப்படுகிறார்கள்.

model image

இந்தியாவில் உள்ள குழந்தை தொழிலாளர்களில் 20% பேர் உத்தரபிரதேசத்தில் மட்டும் உள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 30 வருடமாக அனைவருக்கும் கல்வி திட்டம், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம், சத்துணவு போன்ற திட்டங்கள் சிறப்பாக செயலாற்றியதால் வெகுவாக குறைந்து வந்த குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை கடந்த 3 வருடமாக அதிகரித்து வருவதாக யுனிசெஃப் தெரிவிக்கிறது.

குறிப்பாக, சென்னை, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் பீடி, தீப்பெட்டி, பட்டாசு தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுத்த படுவதாகவும், மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் குவாரிகள், ரசாயன தொழிற்சாலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திருப்பூர், வேலூர் போன்ற இடங்களில் நூற்பாலைகளிலும், தோல் பதனிடும் இடங்களில் வேலை செய்கிறார்கள். சென்னையில் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிப்பது, டீ கடைகள், போதை பொருள் விற்பனையிலும் ஈடுபடுத்தபடுவதாக யுனிசெஃப் ஆய்வு தெரிவிக்கிறது.

model image

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் தடுப்புத்திட்டம் 2017 ஆம்ஆண்டு ரத்து செய்யப்பட்டது. குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, கல்வி கற்க வைக்கும் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதால் குழந்தைத் தொழிலாளர்களை மீட்பது குறைந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் படிப்பை விட்டு வேலைக்கு செல்லும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதாக யுனிசெஃப் தெரிவிக்கிறது. இந்த நிலையை மாற்ற, குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகி இருப்பதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.