அமெரிக்காவின் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விருதை பெற்றார் சென்னை வழக்கறிஞர் லலிதா நடராஜன்!

குழந்தைத் தொழிலாளர் முறையை தடுப்பதற்கான விழிப்புணர்வையும் செயல்பாடுகளையும் அதிகப்படுத்தும் நோக்கத்துடன், இந்த விருது வழங்கப்படுகிறது.
வழக்கறிஞர் லலிதா நடராஜன்,
வழக்கறிஞர் லலிதா நடராஜன்,PT

சென்னையை சேர்ந்த‌ குழந்தைகள் உரிமைகளுக்கான‌ வழக்கறிஞர் லலிதா நடராஜன், அமெரிக்க தொழிலாளர் துறையின் மதிப்புமிக்க குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்கான விருதை பெற்றுள்ளார்.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான 2023 இக்பால் மசிஹ் விருதை வழக்கறிஞர் லலிதா நடராஜனுக்கு அமெரிக்க தொழிலாளர் துறை வழங்கியுள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் நடைபெற்ற விழாவில், அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின் இந்த விருதை லலிதா நடராஜனுக்கு வழங்கினார்.

குழந்தைத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வழக்கறிஞராகவும் செயல்பாட்டாளராகவும் தனது பணிக்காலம் முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன் லலிதா நடராஜன் பணியாற்றியுள்ளார். தென்னிந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தில் ஒரு தலைவராக திகழும் அவர், கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறார் கொத்தடிமைத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு சமூகத்துடன் அவர்க‌ளை மீண்டும் ஒருங்கிணைப்பதில் உதவுகிறார்.

தமிழ்நாடு அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் நலக் குழுவின் (வட மண்டலம்) உறுப்பினராக, குழந்தைத் தொழிலாளர் சட்டம், மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) ஆகியவற்றின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதை அவர் உறுதிசெய்கிறார். குழந்தை தொழிலாளர் பிரச்சினைகளில் பணியாற்றுவதோடு மட்டுமல்லாமல், குடும்ப வன்முறை மற்றும் பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட மற்றும் ஆலோசனை உதவியையும் லலிதா வழங்குகிறார்.

இக்பால் மசிஹ் விருது என்பது அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு அமெரிக்கத் தொழிலாளர் துறை செயலாளரால் 2008ம் ஆண்டு நிறுவப்பட்ட, ரொக்கப் பரிசு இல்லாத‌ விருது ஆகும். குழந்தைத் தொழிலாளர் முறையை எதிர்த்துப் போராடுவதற்கான அசாதாரண பங்களிப்புகளை கௌரவித்து வழங்கப்படும் விருது இதுவாகும். நான்கு வயதில் கம்பளம் நெசவு செய்யும் கொத்தடிமைக் குழந்தைத் தொழிலாளியாக விற்கப்பட்டு, தனது பத்தாவது வயதில் தப்பிய‌ பாகிஸ்தானை சேர்ந்த இக்பால் மசிஹ், பின்னர் குழந்தைத் தொழிலாளர்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, 1995ம் ஆண்டு தனது 12வது வயதில் கொடூரமாகக் கொல்லப்படும் வரை ஏராளமான விருதுகள் பெற்றவர் ஆவார். அவரது நினைவை போற்றும் வகையில் அவரது பெயரில் இக்பால் மசிஹ் விருது வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி அனுசரிக்கப்படும் சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான தினத்தை குறிக்கும் வகையில், குழந்தைத் தொழிலாளர் முறையை தடுப்பதற்கான விழிப்புணர்வையும் செயல்பாடுகளையும் அதிகப்படுத்தும் நோக்கத்துடன், இந்த விருது வழங்கப்படுகிறது.

சென்னையில் மே 30 செவ்வாய்க்கிழமையன்று குழந்தைகள் உரிமைகளுக்கான‌ செயல்பாட்டாளார்கள் பங்கேற்ற‌ விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின் பேசுகையில், "கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்க அரசும் அமெரிக்க மக்களும் அதிக முன்னுரிமை அளிக்கிறார்கள். குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்கான அமெரிக்க தொழிலாளர் துறையின் 2023 இக்பால் மசிஹ் விருதை குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்குப் பாடுபட்டுவரும் லலிதா நடராஜனுக்கு வழங்கும் பெருமை எங்களுக்கு இன்று கிடைத்துள்ளது.

இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான சமூக நீதியைப் பெறுவதற்கு அவரது துணிச்சலான முயற்சிகள் பங்களித்துள்ளன. கல் குவாரிகள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் கைத்தறி ஆலைகள் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழில் துறைகளில் கட்டாய உழைப்பில் இருந்து குழந்தைகளை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இவர் மீட்டுள்ளார். நூற்றுக்கணக்கான இந்தியக் குழந்தைகளின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்திய லலிதா நடராஜனின் வாழ்க்கைப் பணியை இந்த விருது அங்கீகரிக்கிறது,” என்று கூறினார்.

விருதினைப் பெற்றுக் கொண்ட லலிதா நடராஜன் கூறியதாவது: "அமெரிக்கத் தொழிலாளர் துறையின் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்கான மதிப்புமிக்க இக்பால் மசிஹ் விருதை பெறுவதை பெருமையாக கருதுகிறேன். குழந்தைகளின் நலனுக்காக உழைக்க இந்த விருது என்னை மேலும் ஊக்குவிக்கும். குழந்தைகள் நலக் குழுவின் உறுப்பினராக, குழந்தை உரிமைகளுக்கு எதிராக‌ குற்றம் புரிந்தவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்வதற்காக பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசுத் துறைகள், நீதித்துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து நான் பணியாற்றி வருகிறேன். இத்தகைய குற்றங்களில் காவல்துறையால் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்படுவதை உறுதிசெய்ய மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றி வருகிறேன். பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னர் கடத்தல் மற்றும் கொத்தடிமை முறையில் இருந்து மீட்கப்பட்ட‌ குழந்தைகள் நலமுடன் வாழ வேண்டும் என விரும்புகிறேன்."

புகைப்பட விளக்கம் 1: குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்கான அமெரிக்கத் தொழிலாளர் துறையின் 2023 இக்பால் மசிஹ் விருதை வழக்கறிஞ‌ரும் சமூக செயல்பாட்டாள‌ருமான லலிதா நடராஜனுக்கு சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதர் ஜூடித் ரேவின், மே 30, செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் வழங்கினார்.

புகைப்பட விளக்கம் 2: குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புக்கான அமெரிக்கத் தொழிலாளர் துறையின் 2023 இக்பால் மசிஹ் விருதை வழக்கறிஞ‌ரும் சமூக செயல்பாட்டாள‌ருமான லலிதா நடராஜனுக்கு சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதர் ஜூடித் ரேவின், மே 30, செவ்வாய்க்கிழமை அன்று சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் வழங்கினார். பீப்பிள் யூனியன் ஆஃப் சிவில் லிபர்டீஸ் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் டாக்டர். சுதா ராமலிங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் திருமிகு ஏ. எஸ். குமாரி ஆகியோரையும் படத்தில் காணலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com