வி.ஆனந்த நாகேஸ்வரன்
வி.ஆனந்த நாகேஸ்வரன் twitter
இந்தியா

“வேலையில்லாமைப் பிரச்னைக்கு அரசால் தீர்வு காண இயலாது" - மத்திய அரசின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு!

Prakash J

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்திய ’இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024: இளைஞர் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் திறன்கள்’ ஆய்வு அறிக்கை, கடந்த மார்ச் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையை இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன் வெளியிட்டார். இந்த ஆய்வறிக்கையில், 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையில்லாதவர்களின் சதவிதம் 83% ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அப்போது பேசிய அவர், “வேலையில்லாத் திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது. அனைத்துச் சமூக, பொருளாதார பிரச்னைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது. தனியார் நிறுவனங்கள்தான் பணியமர்த்தலைச் செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: ”தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல்; இது பூதாகரமாக உருவெடுக்கும்” - நிர்மலா சீதாராமனின் கணவர் கருத்து!

நாட்டில் வேலைவாய்ப்பு பிரச்னையை முன்வைத்து அனைத்து அரசியில் கட்சிகளும் தங்களது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வேலையில்லா பிரச்னை தொடர்பாக பாஜகவுக்கு ஆதரவாக அவர் பேசியிருப்பது விவாத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ப.சிதம்பரம் பதிலளித்திருந்தார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில், "வேலையில்லாமைப் பிரச்னைக்கு அரசால் தீர்வு காண இயலாது என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. இது பாஜக அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது. பாஜக அரசால் இயலாது என்றால் 'நாற்காலியைக் காலி செய்' என்று நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும். வேலையில்லாமைப் பிரச்னைக்கு பல தீர்வுகள் உண்டு. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்த வழிகளைப் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறோம்" என அதில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: குஜராத்: கைகோர்த்த ஆம் ஆத்மி - காங்கிரஸ்.. பாஜகவை வீழ்த்த வியூகம்!

அதுபோல் தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜும் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமூகப் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு அரசால் தீர்வு காண முடியாது என பிரதமர் மோடி அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் முனைவர் திரு. ஆனந்த நாகேஸ்வரன் அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்து பாஜக அரசின் தோல்விக்கான ஒப்புதல் வாக்குமூலம்!ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்ற கவர்ச்சி வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் பதவி நாற்காலியை ஆக்கிரமித்து வைத்திருந்ததைத் தவிர, மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்ற #BJP என்ன செய்தது? இந்திய இளைஞர்களின் கனவைச் சிதைத்த பாஜகவால் எப்படி கூச்சமே இல்லாமல் மக்களைச் சந்தித்து வாக்கு கேட்க முடிகிறது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ”மனித வளத்தை வளர்ப்பதற்கு அரசாங்கம் போதுமான முன்னுரிமை கொடுக்கவில்லை (குறிப்பாக வடக்கில், தொடக்கப்பள்ளிகளில் சேர்ப்பதில்). சிறு குறு தொழில் முனைவோருக்கு பதிலாக பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தால் வேலைவாய்ப்பின்மையை எப்போதுமே சரிசெய்ய முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன், பாஜகவின் பிரதமர் வேட்பாளராகப் பதவியேற்ற மோடி, ’ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு ஒரு கோடி வேலை வாய்ப்பு வழங்கப்படும்’ என்று வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அறிவித்த 1 மணி நேரத்தில் உத்தவ் அணி வேட்பாளருக்கு 3 வருட பழைய ஊழல் வழக்கில் நோட்டீஸ்; ஆக்‌ஷனில் ED!