திருப்பதி: கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு புதிய தலைமுறை
இந்தியா

திருப்பதி: கடத்தப்பட்ட சென்னை சிறுவன் பத்திரமாக மீட்பு – போலீசாருக்கு குவியும் பாராட்டு!

திருப்பதி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு கடத்தப்பட்ட இரண்டு வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

webteam

திருவண்ணாமலையை சொந்த ஊராகக் கொண்ட சந்திரசேகர் - மீனா தம்பதியர் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சந்திரசேகர் தனது குடும்பத்துடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஏழுமலையான் தரிசனத்திற்காக திருப்பதிக்கு சென்றுள்ளார்.

bus stand

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதன் காரணமாக இரண்டு நாட்கள் காத்திருந்து அவர்கள் ஏழுமலையானை வழிபட்டனர். இதையடுத்து நேற்றிரவு அவர்கள் திருப்பதிக்கு வந்து அங்கிருந்து சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால், சென்னை செல்ல பேருந்து இல்லாததால் திருப்பதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். வெகுநேரம் ஆனதால் இரவு அங்கேயே உறங்கிவிட்டு காலையில் புறப்பட எண்ணியுள்ளனர்.

பெற்றோர் சந்திரசேகர் - மீனா ஆகியோர் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டிருந்த மர்ம நபர்கள், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இரண்டு வயது சிறுவன் முருகனை கடத்திச் சென்று விட்டனர். இதையடுத்து சந்திரசேகர் கண் விழித்து பார்த்தபோது முருகனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அங்கிருந்த போலீசாரிடம் தகவல் கூறியுள்ளார்.

murugan

இதையடுத்து பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சிறுவனை கடத்தியவர்களை கண்டுபிடிக்க திருப்பதி போலீசார் ஐந்து தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்திய போலீசார் மர்ம நபர்களிடம் இருந்து சிறுவனை பத்திரமாக மீட்டு பொற்றோரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். சிறுவன் கடத்தப்பட்டு 12 மணி நேரத்திற்குள் மீட்ட போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.