சென்னையை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தனது மனைவி மீனா மற்றும் 2 மகன்களுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருப்பதிக்கு சென்றுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் அவர்கள் இரண்டு நாட்களாக திருமலையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பின் சென்னைக்கு திரும்ப, திருப்பதியில் உள்ள ஆர்டிசி பேருந்து நிலையத்திற்கு நேற்று சென்றுள்ளனர்.
அங்கு நள்ளிரவு 2 மணியளவில் பேருந்து நிலையத்தில் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, சந்திரசேகரின் இளைய மகன் முருகனை (2) திடீரென காணவில்லை என தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். நள்ளிரவில் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெற்றோரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.