ஸ்லிம் விண்கலம்
ஸ்லிம் விண்கலம் ட்விட்டர்
இந்தியா

‘ஸ்லிம் விண்கலம்’ நிலவில் தரையிறங்க உதவிய சந்திராயன் 2; இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த ஜப்பான்!

PT WEB

செய்தியாளர் - பால வெற்றிவேல்

“இந்தியாவின் சந்திரயான் 2 ஆர்பிட்டர் கொடுத்த படங்களின் அடிப்படையிலேயே ஸ்லிம் விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டது. அதேபோன்று ஸ்லிம் விண்கலத்தின் தொலைத்தொடர்புக்கும் துணையாக இருக்கும் இஸ்ரோவிற்கு பாராட்டுகள்” என ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் விண்கலமான ஸ்லிம் ஜனவரி 19ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. ஸ்லிம் விண்கலம் தரையிறங்கியது முதல் அதன் சோலார் தகடுகள் சரியான கோணத்தில் பொருத்தப்படாத காரணத்தினால் மின்சார உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டது.

இருந்தும் ஜப்பான் விஞ்ஞானிகளின் தொடர் முயற்சியால் நேற்று ஸ்லிம் விண்கலத்தின் சூரிய மின் தகடுகள் சூரியன் இருக்கும் கோணத்தை நோக்கி திருப்பப்பட்டதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஸ்லிம் விண்கலம் அனுப்பப்பட்டதற்கான அறிவியல் ஆய்வை விரிவாக மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஸ்லிம் விண்கலம் திட்டத்திற்கு துணையாக இருந்த நாசா மற்றும் இஸ்ரோவிற்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளது.

“இஸ்ரோவின் சந்திரயான் 2-வுடைய ஆர்பிட்டர், உயர் தெளிவுத்திறன் கொண்ட கண்காணிப்புத் தரவை எங்களுக்கு வழங்கியது. இது SLIM தரை இறங்குவதற்கான தளத்தைத் தேர்ந்தெடுப்பதில் எங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது” என ஜாக்சா தெரிவித்துள்ளது.

இந்த விண்கலங்களின் சர்வதேச ஒத்துழைப்பு இல்லாமல் SLIM-ன் துல்லியமான தரையிறக்கம் சாத்தியமில்லை என ஆய்வு நிறுவனமாக ஜாக்ஸா தெரிவித்துள்ளது. தொடர்ந்து தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, எதிர்காலத்தில் நமது அனைத்து ஆய்வுகளுக்கும் சர்வதேச சமூகத்தை ஆதரிப்பது ஆக்கபூர்வமானது என ஜாக்சா கூறியுள்ளது.

அதே போன்று நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் நிலவில் மேற்பரப்பு குறித்த படத் தரவுகளை பெரிய அளவில் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளது.

ஆர்பிட்டர் 2

ஸ்லிம் விண்கலம் பரிசோதனை முயற்சியாக கடந்த வருடம் செப்டம்பர் 7ஆம் தேதி ஜப்பானில் இருந்து விண்ணில் அனுப்பப்பட்டது. பெயருக்கு ஏற்றார் போல எடையும் குறைவான அளவாக இருப்பதால் வருங்காலத்தில் அதிகப்படியான விண்வெளி பயணங்களை மேற்கொள்வதற்காக ஒரு பரிசோதனை முயற்சியாக விண்கலத்தில் வடிவமைப்பு உருவாக்கப்பட்டது. 560 கிலோ எடை கொண்ட ஸ்லிம் களம் 140 நாட்களுக்கு பிறகு பல்வேறு விதமான சவால்களை எதிர்கொண்டு நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது.

ஸ்லிம் விண்கலத்தின் லாண்டரை ரோவர் எடுத்த புகைப்படத்தை ஜாக்ஸா வெளியிட்டுள்ள நிலையில் அதன் தொலைத்தொடர்பு மற்றும் இயக்கம் திட்டமிட்டபடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.