RBI pt desk
இந்தியா

மோசடிகளை குறைக்க ஜனவரி 1 முதல் சில வங்கிக் கணக்குகள் மூடப்படும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஜனவரி 1, 2025 முதல் சில வங்கிக் கணக்குகள் மூடப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது.

திவ்யா தங்கராஜ்

பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், மோசடிகளை குறைப்பதற்கும், வங்கிச் செயல்பாடுகளின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதற்கும் குறிப்பிட்ட மூன்று வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

bank

ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி எந்தெந்த வங்கிக் கணக்குகள் செயல்படாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதலாவதாக இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு எந்த செயல்பாடும் இல்லாத கணக்குகள் இனி செயல்படாது. இந்தக் கணக்குகள் ஹேக்கர்கள் மற்றும் மோசடியில் ஈடுபடும் நபர்களால் குறிவைக்கப்படும் அபாயம் அதிகம் இருப்பதால், அத்தகைய கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. இது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் என ரிசர்வ் வங்கி நம்புகிறது.

இரண்டாவதாக கடந்த 12 மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக எந்த பண பரிவர்த்தனையும் இல்லாத கணக்குகள் செயலற்றதாகக் கருதப்பட்டு அந்த கணக்குகளையும் மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அப்படி உங்களது வங்கிக் கணக்குகளில் கடந்த ஒரு வருடமாக எந்த பண பரிவர்த்தனையும் நடக்கவில்லை, ஆனால், அந்த வங்கிக் கணக்கு உங்களுக்கு தேவை என்றால் உடனடியாக அதில் குறைந்தபட்சம் ஒரு பரிவர்த்தனையாவது செய்யவேண்டும். இல்லையென்றால் சம்பத்தப்பட்ட வங்கி கிளையை அணுகி தேவையான நடவடிக்கையை எடுக்கவேண்டும். வங்கிகளின் பணிச்சுமையைக் குறைக்கவும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், ஆன்லைன் மோசடியின் வாய்ப்பைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Reserve Bank of India

மூன்றாவதாக, நீண்ட காலமாக zero balance உள்ள வங்கி கணக்குகள் முடக்கப்படலாம். மேலும், வாடிக்கையாளர்கள் KYC நடைமுறைகளை பின்பற்றும் விதிமுறையை இது வலுப்படுத்தும். மேற்குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளில் உங்களது கணக்குகள் இருந்தால், அதனை கண்டறிந்து முறையாக சரிசெய்ய வேண்டியதும் அவசியமாகும்.