ரோடாக் ஐஐஎம் இயக்குநர் தீரஜ் ஷர்மாவின் கல்வி தகுதி குறித்து விசாரணை நடத்த மத்திய கல்வி அமைச்சகம் குடியரசுத் தலைவரிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மேலாண்மை கழகத்தில் சட்டவிதிகளை கடந்த 2023ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, ஆளுநர்கள் கையில் இருந்த அதிகாரம் மாற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் விசாரணையாக இது பார்க்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு ரோடாக் ஐஐஎம் இயக்குநராக நியமிக்கப்பட்ட தீரஜ் ஷர்மா, இளநிலை படிப்பில் 2 ஆம் வகுப்பில்தான் தேர்ச்சி பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தீரஜ் ஷர்மாவின் பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் இதுதொடர்பாக விசாரணை நடத்த குடியரசுத் தலைவரிடம் மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி கோரியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.