சஞ்சார் சாத்தி pt web
இந்தியா

’சஞ்சார் சாத்தி’ செயலி விவகாரம்., முடிவை திரும்பப்பெற்ற மத்திய அரசு.. காரணம் என்ன?

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் எனும் உத்தரவை திரும்பப்பெற்றது மத்திய அரசு; செயலி மூலம் நாட்டு மக்கள் உளவு பார்க்கப்படுவார்கள் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்த நிலையில் இந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டிருக்கிறது.

PT WEB

இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இருக்க வேண்டும் என செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த செயலி மூலம், வாட்ஸ் ஆப் , டெலிகிராம் உள்ளிட்டவைகளில் வரும் தவறான லிங்குகள் மூலம் நடைபெறும் நிதி மோசடிகளை தடுக்கவும், ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளது உள்ளிட்ட விவரங்களை அறியவும் முடியும் என மத்திய அரசு கூறியிருந்தது.

Sanchar Saathi

மேலும், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட மொபைல் ஃபோன்களுக்கு IOS அப்டேட் செய்யப்படும்போது குறிப்பிட்ட செயலி கட்டாயம் இடம்பெற வைக்க வேண்டும் என்றும் செல்போன் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது. தொடர்ந்து, புதிய செல்போன்களில் இந்த செயலியை நிறுவ, 90 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, சஞ்சார் சாத்தி செயலியின் மூலம் நாட்டு மக்களை உளவு பார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என மத்தியரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், மத்திய அரசு அதன் முடிவை திரும்ப பெற்றுள்ளது.

மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா

இது குறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில், சஞ்சார் சாத்தி செயலியை இதுவரை 1.4 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதேபோல, 2,000க்கும் மேற்பட்ட மோசடி குறித்த தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, கடந்த ஒரே நாளில் மட்டும் 6 லட்சம் புதிய பயனாளர்கள் சஞ்சார் சாத்தி செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். எனவே மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக ”செல்போன் நிறுவனங்கள் செயலியை கட்டாயம் இடம் பெற செய்ய வேண்டும்” என்ற உத்தரவு மட்டும் திரும்ப பெறப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.