அனைத்து போன்களிலும் Sanchar Saathi.. செயலி ஏன்? அரசின் உத்தரவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!
இந்தியாவில் விற்கப்படும் அனைத்து வகை ஸ்மார்ட்போன்களிலும் ’சஞ்சார் சாத்தி’(Sanchar Saathi)என்ற செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சஞ்சார் சாத்தியை நிறுவ மத்திய அரசு உத்தரவு
நாடு முழுவதும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், சைபர் குற்றங்களும் பெருகி வருகிறது. இதைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது. எனினும் குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில், சைபர் குற்றங்களில் இருந்து பயனாளிகளைக் காக்கும் வண்ணம், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. சைபர் குற்றங்கள், ஹேக்கிங், ஆன்லைன் மோசடிகள் உள்ளிட்டவற்றை தடுக்கும் நோக்கில், புதிதாக விற்கப்படும் அனைத்து வகை ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி எனப்படும் செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இந்த உத்தரவு ஆப்பிள், சாம்சங், கூகுள், விவோ, ஓப்போ மற்றும் சியோமி உள்ளிட்ட அனைத்து முக்கிய மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கும் பொருந்தும், அவற்றில் பெரும்பாலானவை ஏற்கெனவே இந்தியாவில் தங்கள் சாதனங்களை உற்பத்தி செய்கின்றன. இந்த செயலியை பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் பதிவிறக்கம் செய்யலாம். கடந்த நவம்பர் 28ஆம் தேதியே மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டது. மேலும், புதிய செல்போன்களில் இந்த செயலியை நிறுவ, 90 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களிலும், இந்த செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சார் சாத்தி என்பது என்ன?
சஞ்சார் சாத்தி என்பது சைபர் மோசடியை எதிர்த்துப் போராடவும் தொலைத்தொடர்பு பாதுகாப்பை வலுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட ஒரு குடிமக்களை மையமாகக் கொண்ட முயற்சியாகும். இந்த முயற்சி டெலிகாம் சைபர் பாதுகாப்பு (TCS) விதிகளால் ஆதரிக்கப்படுகிறது, இது உற்பத்தியாளர்களுக்கு IMEI தொடர்பான இணக்க வழிமுறைகளை வழங்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. தொலைபேசி வாங்குவதற்கு முன், அதன் IMEI தடுக்கப்பட்டுள்ளதா அல்லது கருப்புப் பட்டியலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க சஞ்சார் சாத்தி பயனர்களுக்கு உதவுகிறது.
சஞ்சார் சாதிக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!
இதற்கிடையே, இந்த செயலியை நிறுவுவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும், அதை உடனடியாக திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “இந்த நடவடிக்கை குடிமக்களின் தனியுரிமை உரிமையை மீறுவதாகும், இது வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையின் இன்றியமையாத பகுதியாகும். இந்த DoT உத்தரவு அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டது. தனியுரிமைக்கான உரிமை என்பது அரசியலமைப்பின் பிரிவு 21இல் குறிப்பிடப்பட்டுள்ள வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையின் உள்ளார்ந்த பகுதியாகும். முன்கூட்டியே ஏற்றப்பட்ட, நிறுவல் நீக்க முடியாத அரசாங்க செயலி, ஒவ்வொரு இந்தியரையும் கண்காணிக்க ஒரு டிஸ்டோபியன் கருவியாகும். இது ஒவ்வொரு குடிமகனின் ஒவ்வோர் அசைவு, தொடர்பு மற்றும் முடிவைக் கண்காணிப்பதற்கான ஒரு வழிமுறையாகும்” எனப் பதிவிட்டுள்ளார்.

