மத்திய அரசு ராகுல் காந்திக்கு எதிரான உரிமை மீறல் தீர்மானத்தை கைவிட்டுள்ளது. பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தனித் தீர்மானம் தாக்கல் செய்ததால், அரசு தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது. ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்திக்கு எதிரான உரிமை மீறல் தீர்மானம் கைவிடப்பட்டதாக அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 1ஆம் தேதி 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்த போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனேவின் வெளியிடப்படாத புத்தகம் குறித்து பேச முற்பட்டார்.
அப்போது ராகுல் காந்திக்கும் பாஜக எம்பிக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அவைத் தலைவரும் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை. இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
பின்பு ராகுல் காந்தி , 'பிரதமர் மோடி அவைக்கு வந்தால் முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய புத்தகத்தை அளிப்பேன்' என்று கூறியிருந்தார். ஆனால் பிப்ரவரி 4 ஆம் தேதி இந்த தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று கூறப்பட்ட நிலையில் பிரதமர் மோடி அன்று அவைக்கு வரவில்லை.
இந்தசூழலில் ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறி அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜூ ராகுல் காந்திக்கு எதிராக அரசு ஒரு தீர்மானம் கொண்டுவரவிருந்த நிலையில் தற்போது அதனை கைவிட முடிவு செய்துள்ளது என்றும், நிஷிகாந்த் துபே தனித் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளதால் அரசு கொண்டுவரவிருந்த தீர்மானம் கைவிடப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யவும், அவருக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும் கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார்.