இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருப்பவர், ராஜீவ் குமார். இவருடைய பதவிக்காலம் பிப்ரவரி 18ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. இதையடுத்து, அந்தப் பதவிக்கு புதிய ஆணையரைத் தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு களமிறங்கியுள்ளது.
புதிய ஆணையரைத் தேர்வு செய்யும் பணியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இடம்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. இந்தக் குழு, பிப்ரவரி 17ஆம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தேர்தல் ஆணையராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் பீகார் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களை மேற்பார்வையிடுவார் என்று கூறப்படுகிறது.
தற்போதைய தகவல்படி, அந்தப் பதவிக்கு ஞானேஷ் குமார் பெயர் முன்னிலையில் உள்ளது. முன்னதாக, இந்தப் பதவிக்கு 480 பேர் தேர்வு செய்யப்பட்டு, தற்போது இறுதிப் பட்டியலில் 5 பேர் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஞானேஷ் குமார், கேரளப் பிரிவைச் சேர்ந்த 1988-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தகவல்களின்படி, ஞானேஷ் குமார் இதற்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பணியாற்றியுள்ளார்.
முன்னதாக, தலைமை ஆணையர் ராஜீவ் குமார், கடந்த 2022ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தினார். அதைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டு கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநில சட்டசபை தேர்தல்களையும் நடத்தினார். மேலும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களும் அவரது தலைமையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் இவரது தலைமையில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த மக்களவைத் தேர்தலின் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
அதற்குப் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் முதல் சட்டமன்றத் தேர்தலும் இவரது தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து ஹரியானா, மகாராஷ்டிரா, சண்டிகர் ஆகிய மாநிலங்களிலும் இவருடைய தலைமையிலேயே சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. இறுதியாக, இவரது தலைமையில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தலைநகர் டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
1984-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார், பீகார்/ஜார்க்கண்ட் கேடரைச் சேர்ந்தவர். கடந்த 2022ஆம் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். ஓய்வுக்குப் பிறகு ஊடகங்களிடம் இருந்து விலகியிருப்பதாக தெரிவித்திருக்கும் ராஜீவ், அதற்காக இமயமலையில் கொஞ்ச காலம் தங்கப்போவதாக தெரிவித்துள்ளார். பதவிக்காலத்தில் ராஜீவ் மீது காங்கிரஸும், ஆம் ஆத்மியும் குற்றஞ்சாட்டின. அவற்றுக்கு தேர்தல் ஆணையமே பதில் அளித்திருந்தது. ”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்தக் குறைபாடும் இல்லை என்பதும், மீண்டும் வாக்குச்சீட்டுக்கு திரும்ப வேண்டிய அவசியமில்லை என்பதும் அவரது பதிலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.