சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் டிஜிட்டல் மதிப்பீட்டில் குளறுபடிகள் ஏற்பட்டது பெரும் சர்ச்சையான நிலையில், சிபிஎஸ்இ புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் சீதாராமும் புதிய செயலராக வருண் பரத்வாஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் டிஜிட்டல் மதிப்பீட்டில் குளறுபடிகள் ஏற்பட்டது பெரும் சர்ச்சையான நிலையில், சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் மற்றும் செயலர் ஹிமான்ஷு குப்தா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க ராதா சௌஹான் தலைமையில் ஒரு நபர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டிய நிலையில், விதிகள்படியே ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக சிபிஎஸ்இ மறுத்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சிபிஎஸ்இ புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் சீதாராமும் புதிய செயலராக வருண் பரத்வாஜும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிபிஎஸ்இ விடைத்தாள் சர்ச்சை விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலர் இடமாற்றம் செய்யப்பட்டது கண்துடைப்பு எனவும், உண்மையான குற்றவாளியான அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாதுகாக்கப்படுவதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், 1 கோடியே 85 லட்சம் மாணவர்களின் நலனில் பிரதமருக்கு உண்மையில் அக்கறையிருந்தால், கல்வி அமைச்சரைபதவி நீக்கம் செய்து, சுதந்திரமான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான விடைத்தாள் மறுமதிப்பீட்டு இணையதளம் திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, கடுமையான சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக வாரியம் தெரிவித்துள்ளது. வெறும் இரண்டு நிமிடங்களில் 15 லட்சம் முறை முடக்க முயன்றதாகவும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான கோப்புகளை அனுமதியின்றி அணுக முயன்றனர் என்றும் வாரியம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இத்தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு இணையதளம் சீராக இயங்கிவருவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மேலும், சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவில் அதிருப்தியடைந்த மாணவர்களுக்கான விடைத்தாள் நகல் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் போர்ட்டல் ஜூன் 6 நள்ளிரவு வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்களைப் பெற்ற மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். மாணவர்கள் சிபிஎஸ்இ இணையதளத்தில் ஆதார் எண் மூலம் லாக்-இன் செய்து, விடுபட்ட பக்கங்கள், கூடுதல் தாள்கள், வரைபடங்கள், மங்கலான பக்கங்கள் அல்லது தவறான வினாத்தாள் மதிப்பீடு போன்ற குளறுபடிகள் குறித்து ஆன்லைனில் புகாரளிக்கலாம்.. விடைத்தாள் நகல் சரிபார்ப்புக்கு 100 ரூபாய், மறுமதிப்பீட்டுக்கு ஒரு கேள்விக்கு தலா 25 ரூபாய் கட்டணத்தை யுபிஐ அல்லது கார்டுகள் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.