சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நேற்று 2026 வாரியத் தேர்வுகளுக்கான தற்காலிக தேதிப் பட்டியலை அறிவித்தது. அட்டவணையின்படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கியமான தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கி, ஜூலை 15 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 26 நாடுகளிலிருந்து சுமார் 45 லட்சம் மாணவர்கள் 204 பாடங்களில் தேர்வு எழுத உள்ளனர். மாணவர்களின் கல்வித் திட்டம், பள்ளிகளின் நிர்வாகப் பணிகள் மற்றும் ஆசிரியர்களின் விடுமுறைத் திட்டமிடலுக்கு உதவும் வகையில், இந்த தற்காலிக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
cbse board temporary exam date sheet announced விடைத்தாள் திருத்தும் முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு பாடத்தின் தேர்வுக்கும் சுமார் 10 நாட்களுக்குப் பிறகு விடைத்தாள்களின் மதிப்பீடு தொடங்கும் எனவும், மேலும் 12 நாட்களுக்குள் முடிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக, 12 ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வு பிப்ரவரி 20, 2026 அன்று நடத்தப்பட்டால், மதிப்பீடு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 15ஆம் தேதிக்குள் முடிவடையும்.
தற்காலிக அட்டவணை மாணவர்கள் படிப்பை, திறம்பட திட்டமிடவும், பள்ளிகள் கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், ஆசிரியர்கள் தனிப்பட்ட அட்டவணைகளை இன்னும் தெளிவாக நிர்வகிக்கவும் உதவும் என்று CBSE தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறினார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம், CBSE 2026 முதல் 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவதற்கான அதன் கொள்கையை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. புதிய திட்டத்தின் கீழ், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் மொழிகள் ஆகிய நான்கு பாடங்களில் மூன்று பாடங்களில் தங்கள் முடிவுகளை மேம்படுத்த விரும்புவோருக்கு முதல் கட்டாயத் தேர்வு பிப்ரவரி நடுப்பகுதியிலும், விருப்ப இரண்டாம் தேர்வு மே மாதத்திலும் நடைபெறும்.