செய்தியாளர் - M. மீரா
எனர்ஜி சயின்ஸ் அண்டு இன்ஜினீயரிங் (Department of Energy Science and Engineering) துறையில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த சாஹில் வகோடே என்ற மாணவர், தேர்வின்போது செல்போனை பயன்படுத்தியதாகவும், தேர்வு வினாத்தாளை ChatGPT-ல் பதிவேற்றி அதற்கான பதில்களை பெற முயன்றதாகவும் IIT மும்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மாணவரிடம் தேர்வுக் கண்காணிப்பாளர் மற்றும் துறைத் தலைவர் பேசியதாகவும், அவருக்கு ஆலோசனை வழங்கியதுடன், இந்த சம்பவம் அவரது கல்வி வாழ்க்கையைப் பாதிக்காது என உறுதியளித்ததாகவும் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், மாணவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு மாணவர் தனது விடுதி அறைக்குத் திரும்பியுள்ளார். பின்னர் நேற்று மாலை அவரது அறையில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் IIT மும்பை வளாகத்தில் குறுகிய காலத்தில் பதிவான மூன்றாவது மாணவர் தற்கொலை சம்பவம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாணவர்கள் சிலர், அவர் மீது ஓர் ஆண்டு இடைநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என அச்சுறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். இடைநீக்கம் செய்யப்பட்டால் விடுதியை காலி செய்யவேண்டிய நிலையும், அதன் காரணமாக படிப்பு காலம் நீளும் வாய்ப்பும் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். எனினும், இந்தக் குற்றச்சாட்டுள் உறுதி செய்யப்படவில்லை.
இதற்கிடையே, மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.