நிதி மற்றும் பணியாளர் பற்றாக்குறை.. கவலைக்கிடத்தில் சென்னை மாநகராட்சி!!
சென்னை மாநகராட்சி பதினைந்து மண்டலங்களாகவும், இருநூறு வார்டுகளாகவும் பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. மாநகராட்சியின் மொத்த வரி வருவாயில் சொத்து வரி 63 சதவீதமும், தொழில் வரி 19 சதவீதமும், பயன்பாடுகள் மூலம் 11 சதவீதமும் மற்றும் இதர வருவாய் மூலம் 7 சதவீதமும் கிடைக்கிறது. மாநகராட்சியில் 13 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான கட்டடங்கள் வரி செலுத்தும் தகுதியில் இருந்தாலும், 8 லட்சத்துக்கும் குறைவான கட்டடங்களுக்கே வரி வசூலிக்கப்படுவதாக தெரியவருகிறது.
சாலை மேம்பாடு, பூங்காக்கள், அம்மா உணவகம், காலை உணவுத் திட்டங்கள், பொதுக்கழிப்பறைகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதி போன்ற பல்வேறு திட்டங்களால் வரவை விட செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது. 2022 - 2023-ம் ஆண்டில் 3ஆயிரத்து 581 கோடி ரூபாயாக இருந்த செலவினங்கள், 2024 - 2025-ம் நிதி ஆண்டில் 5 ஆயிரத்து 676 கோடியாக ரூபாயாக உயர்ந்து கடுமையான நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சியின் தற்போதைய வரவு 5 ஆயிரத்து 214 கோடி ரூபாய் என்ற நிலையில், செலவு 5 ஆயிரத்து 676 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த பிப்ரவரியில் மேயர் பிரியா 700 கோடி ரூபாய் மதிப்பிலான 96 புதிய திட்டங்களை அறிவித்தார். ஆனால், கடும் நிதிப் பற்றாக்குறை காரணமாக மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதியைக்கூட வழங்க முடியாமல், புதிய திட்டங்களைச் செயல்படுத்த நிதியின்றி மாநகராட்சி தவித்து வருகிறது. மாநகராட்சியில் 18 ஆயிரத்து 600 பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில், தற்போது 12 ஆயிரத்து 700 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் 5 ஆயிரத்து 96 பேருக்குப் பதிலாக 3 ஆயிரத்து எண்ணூற்று இருபத்தேழு பேர் மட்டுமே உள்ளனர். மேலும், 2027-ம் ஆண்டில் 800க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெறவுள்ளதால் பணியாளர் பற்றாக்குறை மேலும் தீவிரமடையும். மாநகராட்சிக்கு 1,970 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை இருப்பதை மாமன்றக் கூட்டத்தில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளதாகவும், நிதி நெருக்கடியிலும் மக்களுக்குத் தேவையான அடிப்படைத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

