கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதனை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
கர்நாடகாவில் 2015ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் மீண்டும் அப்பணிகளை மேற்கொள்ள அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு முடிவு செய்தது. இந்நிலையில், கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அக்டோபர் மாதம் 7ஆம் தேதி வரை நடத்தப்படும் கணக்கெடுப்பின்போது, பொதுமக்களிடம் கேட்கக்கூடிய 60 கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சுமார் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் இப்பணிகளை மேற்கொள்கின்றனர்.
சாதிவாரி கணக்கெடுப்புப் பணிக்காக கர்நாடகா அரசு 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு விவரங்களை டிசம்பர் இறுதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் அரசு மேற்கொள்ளும் சாதிவாரி கணக்கெடுப்பு மதமாற்றத்தை ஊக்குவிப்பதாக அம்மாநில பாஜக தலைவர் ஆர்.அசோகா குற்றம்சாட்டியுள்ளார். வொக்காலிகா, விஸ்வகர்மா, தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட 52 சமூகத்தைச் சேர்ந்தவர்களை கிறிஸ்தவர்களாக மாற்ற சித்தராமையா அரசு முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.