ஒரு காலத்தில் ஒரு இடத்திற்கு செல்லும் போது வழி தெரியவில்லை என்றால் போகும் வழியில் உள்ள மனிதர்கள் கேட்டு கேட்டு செல்வோம். ஆனால், இன்றைய நவீன உலகத்தில் கூகுள் மேப் இல்லை என்றால் ஒரு வேறு வழியில்லை என்றாகிவிட்டது. குறிப்பாக பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் வழியை தேட இந்த கூகுள் மேப்பே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு தொழில்நுட்பத்திலும் நல்லது இருப்பது போல தீமைகளும் இருக்கவே செய்கின்றன. அந்த வகையில், கூகுள் மேப்பை நம்பி செல்பவர்களின் வாகனங்கள் சில நேரங்களில் விபத்துக்குள்ளான செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன. அதுபோன்றதொரு சம்பவம்தான் மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பையில் நடந்துள்ளது.
நள்ளிரவில் நவி மும்பையின் பெலாப்பூர் அருகே ஒரு பெண் கூகுள் மேப்பின் வழிகாட்டுதலின் படி காரை ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது அந்த பெண் பே பாலத்தின் மேல் ஏறி செல்ல வேண்டியிருந்தது. ஆனால் கூகுல் மேப் பாலத்தின் கீழ் செல்லுமாறு தவறாக வழி காட்டியுள்ளது. அதனை அறியாமல் ஓட்டிச் சென்ற அந்தப்பெண்ணின் காரானது நேராக அங்கிருந்த கால்வாயில் விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக அங்கு இருந்த கடல் பாதுகாப்பு காவல்துறையினர் உடனடியாக விழிப்புடன் செயல்பட்டதால், அந்தப் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது. பின்னர், கிரேன் உதவியுடன் கார் கடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது.
கூகுள் மேப்பால் இதுபோன்ற விபத்து ஏற்படுவது இது முதல் முறை அல்ல.
கடந்த 2024 ஆம் ஆண்டு, மூன்று பேர் பரேலியில் இருந்து படாவுன் மாவட்டத்தில் உள்ள டேட்டாகஞ்ச் வரை காரில் சென்று கொண்டிருந்தபோது, கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால் சேதமடைந்த பாலத்தில் ஏறி ஃபரித்பூரில் 50 அடி கீழே ஓடும் ஆற்றில் விழுந்ததில் மூன்று பேரும் இறந்தனர். இந்த சம்பவத்துக்கு பதிலளித்த கூகுல் நிறுவனம், இறந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் விசாரணையில் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்திருந்தது.
மற்றொரு சம்பவம், கேரளாவில் நடந்தது ஐதராபாத்தில் இருந்து சுற்றுலாவிற்காக நான்கு பேர் கொண்ட ஒரு குழு ஒன்று கேரளாவிற்கு வந்துள்ளது. அவர்கள் கூகுள் மேப்பை பார்த்து வண்டி ஓட்டிச் சென்றபோது வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தெரிவித்தபோது கனமழை காரணமாக அந்த பாதையில் செல்ல தடை வித்தித்திருந்ததாகவும், இவர்களுக்கு அந்த ஊரைப்பற்றிய பரீட்சயம் இல்லாததால் நீரில் போய் சிக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.