Chief Election Commissioner ANI
இந்தியா

தலைமை தேர்தல் ஆணையரை பதவிநீக்கம் செய்வது சாத்தியமா? சட்ட நடைமுறை என்ன?

தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய முடியுமா? அதற்கான சட்ட ரீதியிலான நடைமுறை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

Praveen Joshva L

தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்வது சிக்கலானதாக பார்க்கப்படும் நிலையில், அவரை நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்..

SIR என அழைக்கப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டம் நாடு முழுவதும் தீவிரம் அடைந்துள்ளது.

அதிலும் கரப்பான் ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டத்தை தடுக்க 30 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டது இந்தியாவையின் கவனத்தையே ஈர்த்தது. தற்போதைய சூழலில் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையரின் அதிகாரம் மற்றும் அவரை பதவியில் இருந்து நீக்கும் நடைமுறை குறித்த கேள்வி எழுந்துள்ளது.

தன்னாட்சி அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையமே இந்தியாவில் நடைபெறும் தேர்தலைகளை நடத்தி வருகிறது. தேர்தல் காலங்களின்போது தேர்தல் நடைபெறும் பகுதிகளின் முழு கட்டுப்பாடும் தேர்தல் ஆணையத்தின் தலைவரான தலைமை தேர்தல் ஆணையரிடமே இருக்கும்.

இந்த தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த 2023-ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பு ஒன்றை கொண்டுவந்தது. இதன்படி, தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின் மூலம் உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இக்குழுவில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாகப் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒரு மத்திய கேபினெட் அமைச்சர் தேர்வுக் குழுவில் சேர்க்கப்படலாம் என்று மாற்றப்பட்டது.

3 உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழுவில் பிரதமரும், அவர் நியமிக்கும் கேபினெட் அமைச்சரும் இடம்பெறுவதால் ஆளும்கட்சி விரும்பும் நபரை எளிதாகத் தேர்தல் ஆணையராக நியமிக்க முடியும் என்ற நிலை உருவாகியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டு தேர்வான முதல் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னாட்சி அதிகாரத்தோடு 6 ஆண்டுகள் பதவி காலம் கொண்ட இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியில் இருந்து நீக்குவது எளிதான காரியம் அல்ல. மக்களவையில் குறைந்தபட்சம் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) கையெழுத்திட்ட தீர்மானமும், மாநிலங்களவையில் குறைந்தபட்சம் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட தீர்மானமும் சபாநாயகரிடம் வழங்கப்பட வேண்டும்.

பின்னர் இந்த தீர்மானம் விசாரணைக் குழுவுக்கு அனுப்பப்படும். அந்த குழு குற்றச்சாட்டை உறுதி செய்தால் அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும். இரு அவைகளிலும் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த உறுப்பினர்கள் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். அதன் பின்னரே தலைமை தேர்தல் ஆணையரை நீக்கும் அறிவிப்பை அவர் வெளியிடுவார். இதனால் தலைமை தேர்தல் ஆணையரே முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்தால் ஒழிய அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்ற நிகழ்வாகவே உள்ளது.

அதே நேரம் மற்ற தேர்தல் ஆணையர்களைத் தலைமைத் தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.