செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
தமிழ்நாட்டின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரான முகமது பர்வேஸ், சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றபோது மூக்கு கண்ணாடி ஒன்றை அணிந்திருந்தார். இந்தக் கண்ணாடியின் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன. குறிப்பாக, AI கேமரா உடன் கூடிய கண்ணாடி மூலம் சட்டப்பேரவை நிகழ்வுகளை அவர் படம் பிடிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனை தொடர்ந்து, கேமரா வசதி கொண்ட கண்ணாடியை சட்டப்பேரவை போன்ற முக்கியமான இடத்தில் பயன்படுத்தியதாக எழுந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முகமது பர்வேஸிடம், கண்ணாடி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், தனக்கு சிறு வயது முதலே கண்பார்வை திறன் குறைபாடு இருப்பதாக தெரிவித்தார். நான்கு நாட்களுக்கு முன்பு பிரபல கண் மருத்துவமனைக்குச் சென்று கண் பரிசோதனை செய்ததாகவும், அப்போது மருத்துவர் பரிந்துரைத்த கண்ணாடியைத்தான் தற்போது அணிந்திருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
மேலும், தான் அணிந்திருந்த கண்ணாடியை AI கண்ணாடி என்று கூறுவதற்கும், சட்டப்பேரவையில் அதை அணிந்து வந்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்தார். சட்டப்பேரவை நிகழ்வுகள் ஏற்கெனவே நேரலையில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது, AI கண்ணாடியைப் பயன்படுத்தி நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.
தன்னை விமர்சிப்பதற்காகவே இந்த விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பர்வேஸ், தெரிவித்திருக்கிறார்.