டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில், பேரணியில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி, கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் காயம், 6 வயது குழந்தை பாதிப்பு என தகவல் வெளியானதற்கு ஜஸ்பிரித் பும்ரா மனைவி சஞ்சனா கணேசன் கடும் கண்டனம் தெரிவித்து, ஜனநாயகத்தில் குடிமக்கள் அரசை அஞ்சும் நிலை ஏற்க முடியாதது என கூறியுள்ளார்.
கடந்த 1 மாதங்களாக நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள், கூட்டத்தொடரின் முதல்நாளான கடந்த 20ஆம் தேதி பேரணியில் ஈடுபட முற்பட்டனர். எனினும், அவர்களை தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசி டெல்லி காவல்துறையினர் கட்டுப்படுத்தியிருந்தனர். இந்த தாக்குதலில், 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்திருக்கும் சூழலில், 6 வயது சிறுவன் ஒருவரும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் டெல்லி மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், டெல்லியில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்தசூழலில் 'சன்சத் சலோ' போராட்டத்தின்போது, ஆறு வயதுக் குழந்தை கண்ணீர்ப்புகையால் பாதிக்கப்பட்டதாக வந்த செய்திகளுக்கு, ஜஸ்பிரித் பும்ராவின் மனைவியும் விளையாட்டுத் தொகுப்பாளருமான சஞ்சனா கணேசன் எதிர்வினையாற்றியுள்ளார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்திருக்கும் அவர், "கண்ணீர் புகையால் குழந்தைகள் மூச்சுத் திணறுவதை ஜனநாயகத்தில் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. மக்களை பாதுகாக்க வேண்டியவர்களையே பார்த்து குடிமக்கள் அஞ்ச வேண்டிய நிலை ஏற்படக் கூடாது. ஆறு வயது குழந்தைக்கு இது நிகழக்கூடுமென்றால், இது யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம்" என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய இந்த இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.