இந்தியாவின் 88-வது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, NSE மற்றும் BSE பங்குச்சந்தைகள் வார இறுதியில் திறக்கப்பட்டன. ஆனால் 2026 மத்திய பட்ஜெட் எதிரொலியாக மும்பை சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் மற்றும் நிஃப்டி 300 புள்ளிகள் சரிந்ததால், பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார். வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுவது மரபு. ஆனால், 2026-27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யப்படுவதால், இந்திய பங்குச் சந்தைகளான NSE மற்றும் BSE ஆகியன நேரடி வர்த்தகத்திற்காக திறக்கப்பட்டுள்ளன.
இந்திய பங்குச் சந்தைகளின் வரலாற்றில், ஒரு சிறப்பு பட்ஜெட் அமர்வுக்காக வார இறுதியில் வர்த்தகம் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர், 1999ஆம் ஆண்டில் பிப்ரவரி 27, சனிக்கிழமை அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, சந்தைகள் வார இறுதியில் திறக்கப்பட்டன. தனிநபர் வருமான வரி குறைப்பு, பெருநிறுவன வரி குறைப்பு மற்றும் ஜிஎஸ்டி மூலம் நுகர்வு வரி குறைப்பு ஆகியவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால், பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் குறைவாகவே இருந்ததாக சந்தை நிபுணர் அஜய் பக்கா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தான், இன்று நாடாளுமன்றத்தில் நாட்டின் 88-வது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் நிலையில், இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்திருக்கின்றன. அதன்படி, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்திருக்கிறது.