நாடாளுமன்றத்தில் இன்று தாக்கலாகும் மத்திய பட்ஜெட்.. சலுகைகளை எதிர்நோக்கும் மக்கள்!
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பட்ஜெட்டை சமர்ப்பிக்கிறார். வருமான வரிச் சலுகைகள், வேலைவாய்ப்பு, விலைவாசி குறைப்பு, தொழிற்துறை வளர்ச்சி ஆகியவற்றில் பல்வேறு சலுகைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அமெரிக்க வரி நெருக்கடி, சர்வதேச போர் பதற்றங்கள், ரூபாய் மதிப்பு சரிவு போன்ற சவால்களை எதிர்கொள்ளும் பட்ஜெட் இது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அமெரிக்க வரி நெருக்கடி, சர்வதேச அளவில் போர் பதற்றங்கள், ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
அந்நிய முதலீடுகள் இந்திய சந்தைகளில் இருந்து தொடர்ந்து வெளியேறுவது கவலை தரும் நிலையில், அதை தடுத்து நிறுத்தவேண்டிய நெருக்கடியில் அரசு உள்ளது. தனிநபர்களுக்கு வருமான வரிச் சலுகைகள், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் விலைவாசி குறைப்பிற்குமான நடவடிக்கைகள், தொழிற்துறைவளர்ச்சிக்கு ஊக்கம் என பல்வேறு அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகின்றன.
குறிப்பாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்ப்புகள் உள்ளன. எனினும் சலுகைத் திட்டங்களை விட இம்முறை நிதி ஒழுங்கை பராமரிப்பதற்கும் சீர்திருத்தங்களுக்குமே பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிர்மலா சீதாராமன் பெறவிருக்கும் பெருமை..
மத்திய பட்ஜெட்டை அதிக முறை தாக்கல் செய்த 2ஆவது நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற உள்ளார். மொரார்ஜி தேசாய் 10முறை பட்ஜெட் சமர்ப்பித்து முதலிடத்தில் உள்ள நிலையில் ப.சிதம்பரம் 9 பட்ஜெட்டுகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். நிர்மலா சீதாராமன் ஏற்கெனவே 8 பட்ஜெட்டுகளை அளித்துள்ள நிலையில் தற்போது தொடர்ச்சியாக 9ஆவது பட்ஜெட்டை வெளியிட உள்ளார்.
புதிய வருமான வரிசட்டம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்அமலுக்கு வர உள்ள நிலையில் தாக்கலாகும் முதல் பட்ஜெட் என்பதாலும் இது கவனம் பெறுகிறது. மேலும் மத்திய பட்ஜெட் 1999ஆம்ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை தாக்கலாவதும் கவனம் பெறுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் இந்திய பங்குச்சந்தைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

