மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அங்கு மராத்தி அல்லாதவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையில் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி மாநகராட்சித் தேர்தல் நடைபெற்றது. மும்பை மாநகராட்சியில் மொத்தம் 227 வார்டுகள் உள்ள நிலையில், அங்கு ஏராளமான வார்டுகளில் மராத்தி அல்லாத வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். 1960களில் மும்பையின் மக்கள்தொகையில் மராத்தியர்கள் அல்லாதவர்கள் சுமார் 58 சதவீதமாக இருந்ததோடு, கிட்டத்தட்ட 45 சதவீத மாநகராட்சி உறுப்பினர்கள் மராத்தி அல்லாதவர்களாக இருந்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் நடந்த தேர்தல்களில் இருந்து 1968-ம் ஆண்டு வரை மும்பையின் 21 மேயர்களில் 15 பேர் மராத்தி அல்லாதவர்களாகவே இருந்துள்ளனர்.
ஆனால், இந்த நிலை சிவசேனாவின் வருகைக்குப் பின்னர் அப்படியே மாற்றம் கண்டது. மண்ணின் மனிதர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து 1968-ஆம் ஆண்டு மும்பை மாநகராட்சி தேர்தலில் களம் கண்ட சிவசேனா, மொத்தம் உள்ள 121 இடங்களில் 42 இடங்களை வென்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து 1973-ஆம் ஆண்டு மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா முதல்முறையாக மேயர் பதவியை கைப்பற்றியது. அதன் பின்னர் அங்கு மராத்தி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததோடு, பிற மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. ஆனால், இந்த நிலை பாஜகவின் வருகைக்குப் பின்னர் மாறத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட, மும்பை மராத்தியர்களுக்கே என்ற முழக்கமே உத்தவ் தாக்கரே சிவசேனாவின் முழக்கமாக இருந்தது. மேலும் பாஜக, மும்பையில் மராத்தி அல்லாத ஒருவரை மேயராக்க விரும்புவதாகவும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா விமர்சித்து வந்தது.
இந்தச் சூழலில் கடந்த பல பத்தாண்டுகளைவிட இந்த தேர்தலில் மும்பையில் மராத்தி அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளது. மும்பை மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 227 உறுப்பினர்களில், 78 பேர் மராத்தி அல்லாதவர்கள் என இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது மாநகராட்சியின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மராத்தி அல்லாதவர்களாக இருக்கின்றனர்.
மும்பை மாநகராட்சியில் கடந்த 2012-ஆம் ஆண்டில் மராத்தியர் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை 28 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 33 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக பாஜக சார்பில் தேர்வான உறுப்பினர்களின் 42.7 சதவீதம் பேர் மராத்தி அல்லாதவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற 24 மாநகராட்சி உறுப்பினர்களில், 16 பேர் மராத்தி அல்லாதவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த 78 உறுப்பினர்களில் 24 உறுப்பினர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், 16 உறுப்பினர்கள் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. அதே நேரம், அங்கு தென் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது என்பதும் உறுதியாகியுள்ளது.
இதன்மூலம் மும்பையில் 1960களுக்குப் பிறகு மீண்டும் மராத்தி அல்லாதவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் சிவசேனா கட்சி இந்த விவகாரத்தை குறிப்பிட்டு பெரியளவில் அரசியல் பரபரப்புகளை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனாவின் வளர்ச்சி என்பதே மண்ணின் மைந்தர்கள் என்பதை அடிப்டையாகவே கொண்டு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.