மோடி Reuters
இந்தியா

பட்டியலின மக்களின் வாக்குகளை குறிவைக்கும் பாஜக.. உ.பி., பஞ்சாப் தேர்தலுக்காக புதிய வியூகம்!!

அடுத்த ஆண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள பட்டியலின மக்களின் வாக்குகளை ஈர்க்கும் நோக்கத்தில், பாஜக ஒரு புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது.

PT WEB

பாஜக ஆட்சிபுரியும் உத்தர பிரதேசத்தில், ஆண்டின் தொடக்கத்திலேயே சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதோடு, ஆம் ஆத்மியின் ஆட்சி நடக்கும் பஞ்சாப் மாநிலமும் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளில் பாஜக இறங்கி உள்ளது. அதன் ஒரு முயற்சியாக, பட்டியலின வாக்காளர்களை ஈர்க்கும் வகையில், ’ சம்ரஸ்தா சங்கல்ப் யாத்திரை' (Samrasta Sankalp Yatra) என்ற யாத்திரையை பாஜக முன்னெடுத்துள்ளது. 16 நாட்களில் 7 மாநிலங்கள் வழியாக சுமார் 2 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரம் பயணித்து டிசம்பர் 3ஆம் தேதி வாரணாசியில், இந்த யாத்திரை நிறைவடைய உள்ளது.

Samrasta Sankalp Yatra

15ஆம் நூற்றாண்டு சமூக சீர்திருத்தவாதியான குரு ரவிதாஸின் 650ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த நவம்பர் 18ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள தேரா பல்லான் அருகே இந்த யாத்திரை தொடங்கியது. பஞ்சாபின் 14 மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெறும் இந்த யாத்திரை, நவம்பர் 28ஆம் தேதி மதுரா வழியாக மீண்டும் உத்தரப் பிரதேசத்திற்குள் நுழைந்து, ஆக்ரா, கான்பூர், லக்னோ, பிரயாக்ராஜ் வழியாக சென்று வாரணாசியில் முடிவடைகிறது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக உள்ள உத்தர பிரதேசத்தில் மொத்தமாக 403 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில், இதில் 84 தொகுதிகள், பட்டியலின மக்களுக்கான தனித் தொகுதிகளாக உள்ளன. இதேபோல், பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளில், 34 தொகுதிகள் தனித் தொகுதிகளாக இருக்கின்றன. பஞ்சாப் மாநில மக்கள்தொகையில் 32 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 21 சதவீதமும் பட்டியலின மக்கள் உள்ள நிலையில், அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.