தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்து, தமிழகத்தைச் சேர்ந்த I-N-D-I-A கூட்டணிக் கட்சிகளுக்கு பாரதிய ஜனதா கட்சி அழுத்தம் உண்டாக்கியுள்ளது. திமுக, விசிக, மற்றும் மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்கிற கருத்து வரும் நாட்களில் வலியுறுத்தப்படும் எனக் கருதப்படுகிறது. அப்படி அவர்கள் ஆதரவு அளிக்காவிட்டால், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு வராமல் தடுக்க திமுக கூட்டணி முயற்சித்தது என பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிரசாரம் செய்ய வாய்ப்பு உள்ளது.
திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சமயத்தில், ஆளும் கூட்டணியில் இல்லாவிட்டாலும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஜு ஜனதா தளம் கட்சி அவருக்கு ஆதரவு அளித்தது. அதேபோல் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டபோது, காங்கிரஸ் கட்சியை மேற்கு வங்கத்தில் கடுமையாக எதிர்த்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்தார்.
இத்தகைய உதாரணங்களைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் அளிக்க ஆளும் பாஜக கூட்டணி திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அழுத்தம் உண்டாக்கலாம் என தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கருதுகிறார்கள். அதேசமயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிட்டாவிட்டாலும் சி.பி.ராதாகிருஷ்ணன் சுலபமாக குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவார் என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.
மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றைச் சேர்ந்த கிட்டத்தட்ட 780 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 425 எம்பிக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர். எதிர்க்கட்சிகளின் i-n-d-i-a கூட்டணிக்கு ஆதரவாக கிட்டத்தட்ட 355 வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்து ஆகஸ்ட் 21ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். செப்டம்பர் ஒன்பதாம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.