பா.ஜ க தேசிய தலைவராக கடந்த 2020 பிப்ரவரியில் பொறுப்பேற்றார் ஜெ.பி.நட்டா. இவரது பதவிக்காலம் ஏற்கனவே முடிந்த நிலையில், கடந்த மக்களவை தேர்தலுக்காக நட்டாவின் பதவிக்கலாம் நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், கட்சியின் புதிய தலைவர் நியமனம் குறித்து சில மாதங்களாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, ஜெ.பி.நட்டா ஆகியோர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.
நீண்ட மாதங்களாக நடந்துவந்த ஆலோசனையின் முடிவில், தேசிய செயல் தலைவராக பீஹார் மாநிலத்தை சேர்ந்த நிதின் நபின் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் நாடாளுமன்றக் குழு இந்த முடிவை எடுத்ததாக, கட்சி தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதின் நபின் தற்போது பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.
பீகாரைச் சேர்ந்த மறைந்த நபீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன்தான் இந்த நிதின் நபின்.. பிரசாத் சின்ஹா பாஜக மூத்த தலைவராகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். அவரது மறைவுக்குப் பிறகு நிதின் நவீன் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். அடுத்தடுத்து அவரது அரசியல் நகர்வுகளும் வேகமெடுத்தன. கடந்த 2006ஆம் ஆண்டு பாங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதல்முறை வெற்றி வாகை சூடினார். அதனைத் தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். குறிப்பாக 2010, 2015, 2020 மற்றும் 2025 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
2020 சட்டமன்றத் தேர்தலில் நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்காவின் மகன் லவ் சின்காவை தோற்கடித்து நிதின் நபின், பாஜக தலைவர்கள் மத்தியில் கவனம் பெற்றார். அதே சமயம், மாநிலத்திலேயே கட்சியின் வலுவான தலைவர்களில் ஒருவராகவும் தடம் பதித்தார் நிதின் நபின். அடிமட்ட தொண்டர்களுடன் நெருக்கமாக பழகி அவர்களின் நம்பிககையைப் பெற்றது மட்டுமின்றி, பாஜக தலைமைக்கு நம்பிக்கை நாயகனாகவும் மாறினார். பீகாரில் கட்சியின் கட்டமைப்பு பணிகள், தேர்தல் மேலாண்மை, தொண்டர்களின் வலையமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் நிதின் நபின் திறமை வாய்ந்தவர். இந்த நிலையில்தான் நிதின் நபின் தேசிய செயல் தலைவர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய செயல் தலைவர் என்ற முறையில், மத்திய தலைமையையும் மாநில கட்சிகளையும் இணைக்கும் பாலமாக நபின் செயல்படுவார் என்றும், நாடு முழுவதும் பாஜக அரசியல் தேர்தல் உத்திகளை கொண்டு செல்வார் எனவும் பாஜக தலைமை கூறியுள்ளது.