நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் வங்கி சட்டம் (திருத்த) மசோதா 2024 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளின் சில அம்சங்களைத் திருத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று நடந்தது. அப்போது மக்களவையில் தனது முதல் உரையைப் பேசிய பாஜக எம்பி சம்பித் பத்ரா, 1970களில் நடந்த நகர்வாலா ஊழலைக் குறிப்பிட்டு, அது மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் என குறிப்பிட்ட அவர், நகர்வாலா சம்பவம் தொடர்பான புத்தகங்களைப் படிக்கும்படி எம்பிக்களையும் கேட்டுக்கொண்டார்.
நகர்வாலா ஊழல் விவகாரத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை குறிப்பிட்டதற்காக திமுக எம்பி ஆ.ராசா கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தார். இது விதி 94ஐ மீறுவதாக குற்றம் சாட்டிய அவர், "மதிப்பிற்குரிய உறுப்பினர் (பாஜக எம்பி) 1971-ல் இந்திரா போன் செய்து ஸ்டேட் வங்கி அதிகாரியிடம் ரூ.60 லட்சம் கொடுக்கச் சொன்னதாக குறிப்பிட்டார். அவர் சொன்ன விஷயம் மசோதாவில் உள்ளதா, அதில் ஏதேனும் அதற்கான முகாந்திரம் உள்ளதா... இந்திரா காந்தி அவையில் இல்லை. மசோதாவின் வரம்பை தாண்டி எந்தவித காரணமும் இல்லாமல் இந்திரா காந்தியின் பெயரை ஏன் குறிப்பிடுகிறீர்கள், இதன் அர்த்தம் என்ன? அவைத் தலைவரும் அதனை அனுமதிக்கிறார்” என ஆவேசமாக தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த பத்ரா, இந்த மேற்கோள் மசோதாவின் சூழலுடன் நேரடியாகத் தொடர்புடைய ஒன்று எனத் தெரிவித்தார். அவர் கூறுகையில், "நாம் வங்கி முறையைப் பற்றி விவாதித்து வருகிறோம், இந்த வழக்கு வங்கித் துறையின் சீர்திருத்தங்களை அடிப்படையாகக் கொண்ட அடித்தளங்களில் ஒன்று” என பதிலளித்தார்.
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆட்சேபம் தெரிவித்தார். "சம்பித் பத்ரா ஏற்கனவே உள்ள ஒரு வழக்கைக் குறிப்பிட்டுள்ளார், அவர் ஒரு வழக்கை உருவாக்கவில்லை, அது பதிவில் உள்ளது, எனவே விவாதம் மசோதாவை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறினார்.
காங்கிரஸ் தலைவர் கே சி வேணுகோபால் இதுதொடர்பாக பேசுகையில், “இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இந்திரா காந்தி நாட்டின் தியாகி. அவர் பாகிஸ்தானுக்கு எதிராக வென்றார் என்றும் பாகிஸ்தானுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இந்திரா காந்தியை பாராட்டினார். துர்கை என்றும் குறிப்பிட்டார்” என கே. சி. வேணுகோபால் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "இந்திரா காந்தியின் சாதனைகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அதே அளவு அவசர நிலையையும் நினைவில் வைத்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்..
இறுதியில் சபாநாயகருக்கு எதிராக எந்த கோஷமும் எழுப்பக்கூடாது எனத் தெரிவித்த சபாநாயகர் ஓம்பிர்லா, இருதரப்பு உறுப்பினர்களையும் தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்க்குமாறு தெரிவித்தார். விவாதத்தின்போது கூறப்பட்ட கருத்துகள் பொருத்தம் மற்றும் துல்லியம் காரணமாக மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.