ஹரிபூஷன் தாக்கூர் பச்சௌல், தேஜஸ்வி யாதவ் pt web
இந்தியா

ஹோலி பண்டிகை | “இஸ்லாமியர்கள் வீட்டில் இருக்க வேண்டும்” - பாஜக எம்எல்ஏ கருத்துக்கு கடும் எதிர்ப்பு

பீகார் மாநில பாஜக எம்எல்ஏ ஒருவர் ஹோலி பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் வீட்டிலேயே இருங்கள் என சர்ச்சையான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அங்கேஷ்வர்

வெள்ளிக்கிழமை நண்பகலில் மசூதியில் செய்யப்படும் கூட்டுப் பிரார்த்தனை இஸ்லாமியர்களுக்கு மிக முக்கியத்துவமானவது. அதிலும், புனித ரமலான் மாதமான மார்ச் மாத வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் பிராத்தனை இன்னும் சிறப்பு வாய்ந்தது. மறுபுறம், ஹோலி பண்டிகையை கொண்டாடும் மக்களும் உற்சாகமும் அனைவரும் அறிந்தது. ஆனால், இந்த ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி ஹோலி பண்டிகை வருகிறது. இது வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் நாளில் வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பீகார் மாநில பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் பச்சௌல் சர்ச்சையான கருத்தொன்றைத் தெரிவித்துள்ளார்.. பீகார் மதுபனி மாவட்டத்திலுள்ள பிஸ்ஃபி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ பச்சௌல். இவர் சமீபத்தில் அளித்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்த கருத்துதான் சர்ச்சையாகியுள்ளது.

இஸ்லாமியர்கள் வீட்டில் இருங்கள்

அவர் கூறுகையில், “இஸ்லாமியர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். ஒரு வருடத்தில் 52 ஜூம்மா வருகின்றன (ஜூம்மா - வெள்ளிக்கிழமை நண்பகலில் மசூதியில் இஸ்லாமியர்கள் செய்யும் கூட்டுப் பிரார்த்தனை). அதில், ஒரு வெள்ளிக்கிழமை ஹோலிப்பண்டிகையின் நாளோடும் ஒத்துப்போகிறது. எனவே, அவர்கள் இந்துப் பண்டிகையைக் கொண்டாட அனுமதிக்க வேண்டும். அவர்கள் மீது வண்ணங்கள் பூசப்பட்டால் அவர்கள் கோபப்படக் கூடாது. வண்ணங்கள் பூசப்படுவது பிரச்னையாகத் தெரிந்தால் அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு இது மிக அவசியம்.

இஸ்லாமியர்கள் எப்போதும் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். ஏனெனில், வண்ணப்பொடிகளை விற்பனை செய்து பணம் சம்பாதிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், அவர்களின் துணிகளில் கரைகள் படிந்தால் அவர்கள் நகரத்தைப் பற்றிப் பயப்படத் தொடங்குகிறார்கள். மத நல்லிணக்கத்தைப் பேண ஒருவருக்கொருவர் மதத்தையும், மத நடைமுறைகளையும் மதிக்க வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதைச் சொல்வதற்கு அவர் யார்?

பச்சௌலின் இந்த கருத்து அரசியல் களத்தில் விவாதப்பொருளானது. இதுதொடர்பாக பேசிய ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், “பாஜக எம்..எல்.ஏ பச்சௌல் இஸ்லாமிய சகோதரர்கள் ஹோலி பண்டிகைக்கு வெளியில் வரவேண்டாம் என தெரிவித்துள்ளார். இதைச் சொல்வதற்கு அவர் யார்? இதுபோன்ற விஷயங்களை அவரால் எப்படிச் சொல்லமுடியும். இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகள் மிக மோசமானவை. பச்சௌல் மேல் நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு தைரியம் உள்ளதா? இது ராமர் மற்றும் ரஹீம் மீது நம்பிக்கை கொண்ட நாடு. இது பீகார், இங்கு ஒரு இஸ்லாமிய சகோதரனை ஆறு இந்துக்கள் சேர்ந்து பாதுகாப்பார்கள் என்பதை பச்சௌல் புரிந்துகொள்ள வேண்டும். பாஜக வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை தெரிவிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடுகிறது. நாங்கள் கூட்டு கலாச்சாரத்தை நம்புகிறோம்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் ஆளும் கூட்டணியில் அமைச்சராக இருப்பவருமான அசோக் சாவித்ரி, நாடு அனைத்து மத மக்களுக்கும் சொந்தமானது எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “பாஜக இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது அந்த எல்.எல்.ஏ.வின் தனிப்பட்டக் கருத்தாக இருக்கலாம். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் அந்த கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மக்களைப் பிரிக்கும் முயற்சி

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த் சங்கர் இதுதொடர்பாகக் கூறுகையில், “பண்டைய காலத்தில் அரக்கர்கள் பூஜைகளில் தலையிடுவதுபோல, தற்போது பாஜகவினர் பண்டிகைகளில் தலையிடுகிறார்கள். மக்களை சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பிரிக்க முயற்சிக்கிறார்கள். அதில் அரசியல் ஆதாயம் பெறுகிறார்கள், அப்படித்தான் அவர்கள் செயல்படுகிறார்கள். இந்த நாடு அரசியலமைப்பின் மூலம் இயங்குகிறது. அப்படியானால், இதுபோன்ற விஷயங்களை அவர்கள் பேசக்கூடாது. முதல்வர் இதை உணர்ந்துகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பீகாரின் சிறுபான்மைத் துறை அமைச்சரான ஜாமா கான் கூறுகையில், “எந்தவொரு விரும்பத்தகாத சம்பவமும் நடக்காது. பண்டிகைக் காலத்தில் மத நல்லிணக்கத்தை உறுதி செய்ய நிர்வாகத்திற்கு தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரபிரதேசத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் இதேபோன்ற கருத்தினைத் தெரிவித்தார். இது உத்தரபிரதேச அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர். அதிகாரிகள் பாஜகவின் முகர்வகளைப் போல செயல்படக்கூடாது எனத் தெரிவித்தனர். ஆனால், காவல்துறையினரின் கருத்தை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆதரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.