உலக சுற்றுச்சூழல் தினத்தன்று இந்தூரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் பேசிய கருத்து, சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
மத்தியப் பிரதேச அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா இந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “மேற்கத்திய நாடுகளில் ஒரு பழமொழி உள்ளது. சிறு ஆடை அணிந்த ஒரு பெண் அழகாக இருப்பதைப்போல, தலைவர்களும் சிறு உரையாற்றுவதுதான் அழகு என்று வெளிநாடுகளில் கூறுவர். ஆனால், இது ஏற்கத்தக்கதல்ல.
வெளிநாடுகளில் பெண்கள் குறைவான ஆடைகளை அணிவதுதான் நல்லது என்று நினைக்கின்றனர். இப்போது, நம் நாட்டு பெண்களும் வெளிநாட்டுச் சிந்தனையோடுதான் இருக்கின்றனர்.
இந்தியாவில் பெண்களை தெய்வத்தின் வடிவம் என்று நம்புகிறேன். அவர்கள் மிகவும் நல்ல ஆடைகளை அணிய வேண்டும். நம் நாட்டில் ஒரு பெண் நல்ல மற்றும் அழகான ஆடைகளை அணிந்து, நல்ல ஒப்பனை செய்து, நகைகளை அணிந்தால் மட்டுமே, அவரை மிகவும் அழகாக கருதுவர். பெண்கள் குறைவான ஆடைகளை அணிவது எனக்கு பிடிக்காது. என்னுடன் செல்ஃபி எடுக்க முயலும் பெண்கள் நல்ல ஆடைகளை அணிந்துகொண்டுதான் செல்ஃபி எடுக்க வர வேண்டும்.” என்று பேசியுள்ளார். இந்நிலையில், பாஜக அமைச்சரின் கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
பாஜக தலைவர்கள் இப்படி பேசுவது ஒன்றும் புதிதல்ல. கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டபோது, பசுவதை நடப்பதால்தான் கேரளாவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது என கூறி சர்ச்சையை கிளப்பினார் பாஜக முன்னாள் எம்எல்ஏ கியான்தேவ் அஹுஜா.
கேரளா ஒரு மினி பாகிஸ்தான் என்றும் அதனால்தான் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கு போட்டியிட்டனர் என்றும் அவர்களுக்கு வாக்களித்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்றும் மகாராஷ்டிரா அமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான நிதேஷ் ரானே தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.