viral video image x page
இந்தியா

ம.பி. | சுங்கச்சாவடி ஊழியர்களைத் தாக்க முயன்ற பாஜக எம்.எல்.ஏ. மருமகன்.. #Viralvideo

ம.பியில் பாஜக எம்எல்ஏ மனோஜ் சவுத்ரியின் மருமகன், சுங்கச்சாலை ஊழியர்களை தடியைக் காட்டி திட்டும் வீடியோ. வைரலாகி வருகிறது.

Prakash J

மத்தியப் பிரதேசத்தில் ஹட்பிப்லியா தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் மனோஜ் சவுத்ரி. இவர் பாஜகவைச் சேர்ந்தவர். இவருடைய மருமகன் நிகில். இந்த நிலையில், தேவாஸ்-போபால் நெடுஞ்சாலையில் உள்ள போராசா காவல் நிலைய அதிகார வரம்பிற்குட்பட்ட போராசா சுங்கச்சாவடி ஊழியர்களிடம் மனோஜ் சவுத்ரியின் மருமகன் நிகில் மிரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் செலுத்தச் சொன்னபோது மோதல் தொடங்கியதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். நிகில் தனது வாகனத்திலிருந்து கோபத்துடன் வெளியே வந்து, "எம்எல்ஏவின் பெயரில் அனைத்து வாகனங்களும் இலவசமாக செல்லும்" என்று கூறியதாகவும், இதனால் அவருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அப்போது நிகில், கையில் தடியுடன் அவர்களைப் பார்த்து திட்டியபடியே அடிக்கப் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் சுங்கச்சாவடி மேலாளர் ராகவேந்திர சிங் அளித்த புகாரின் பேரில், நிகில் மீது துஷ்பிரயேகம் மற்றும் குற்றவியல் மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போராசா போலீசார் தெரிவித்தனர். முன்னதாக, அரசியல் அழுத்தம் காரணமாக நிகில் மீது மேலாளர் புகார் அளிக்க உடனடியாக முன்வரவில்லை என சுங்கச்சாவடி ஊழியர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதேபோன்று பல எம்.எல்.ஏக்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நடந்துகொள்வதாக மாநில பாஜக தலைவர் ஹேமந்த் கண்டேல்வால் குற்றஞ்சாட்டியிருந்ததுடன், அதைக் கடுமையாகக் கண்டித்திருந்தார். ஜூலை 21 அன்று, பாஜக எம்எல்ஏ கோலு சுக்லாவின் மகன் மகாகல் கோவிலில் பூசாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டார். அதேநேரத்தில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் சாமுண்டா மாதா கோவிலிலும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டார். தாதியாவின் பாஜக எம்எல்ஏ பிரதீப் அகர்வாலுக்கும் அவரது மகன் எம்எல்ஏ பெயர்ப் பலகையுடன் வாகனம் ஓட்டிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், நிகில் விவகாரம் மீண்டும் எதிரொலித்துள்ளது.