ராகுல்காந்தி pt web
இந்தியா

"ராணுவத்தை சாதியின் பெயரால் பிளவுபடுத்தும் நோக்கம்" - ராகுலின் கருத்துக்கு பாஜக கண்டனம்

தேர்தல் பரப்புரையின்போது, ராணுவம் குறித்து ராகுல் காந்தி முன்வைத்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

PT WEB

பிஹார் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தி ராணுவத்தை சாதியின் பெயரால் பிளவுபடுத்தும் நோக்கத்தில் பேசியதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

பிஹார் தேர்தலில் நாளை நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவில் ஆயிரத்து 314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக கையாண்டு வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெரும் நிலையில், மாநில காவல் துறையினருடன் இணைந்து, துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைமுறை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

ராகுல் காந்தி

முதற்கட்ட தேர்தல் பரப்புரை முடிவடைந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மொத்த மக்கள்தொகையில் சுமார் 90 சதவீதம் அளவுக்கு இருக்கும் பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் போன்றவர்களுக்கு, தனியார் நிறுவனங்கள், நீதித் துறை, அரசு நிர்வாகம், ராணுவம் போன்ற முக்கிய அமைப்புகளில் பிரதிநிதித்துவம் இல்லை என குற்றஞ்சாட்டி உள்ளார். 10 சதவீத மக்கள் மட்டுமே இந்த முக்கிய நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதாகவும் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

தேர்தல் பரப்புரையின்போது, ராணுவம் குறித்து ராகுல் காந்தி முன்வைத்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பேசிய பாஜக மூத்த நிர்வாகி சுரேஷ் நாக்குவா, ராணுவத்தை சாதியின் பெயரால் பிளவுபடுத்தும் நோக்கத்தில் ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் பேசியதாக விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய சுரேஷ் நாக்குவா, இந்திய நாடு மீதான ராகுல் காந்தியின் வெறுப்பு அதிகரித்து வருவதாகவும், வரம்பை மீறி அவர் பேசி வருவதாகவும் கடுமையாக சாடி உள்ளார்.