அரவிந்த் கெஜ்ரிவால்,
அரவிந்த் கெஜ்ரிவால்,  கோப்புப் படம்
இந்தியா

டெல்லி முதல்வரின் அரசு இல்லத்தை புதுப்பிக்க ரூ.45 கோடி செலவு? பாஜக, காங்கிரஸ் குற்றச்சாட்டு!

PT WEB

‘கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் மக்கள் மிகப்பெரிய பாதிப்பை கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் சந்தித்து வந்தனர். அந்த நேரத்தில் மக்களின் வரிப்பணம் டெல்லி முதல்வர் இல்லத்தை அலங்கரிக்க வீணாக செலவிடப்பட்டுள்ளது’ என பாஜகவினர் புகார் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக அரசு ஆவணங்கள் சிலவற்றை சுட்டிக்காட்டியுள்ள பாஜக தலைவர்கள், ‘தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், Flag Staff சாலையில் உள்ள ஒன்றாம் எண் அரசு பங்களாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த பங்களாவில் புதிய திரைச்சீலைகளுக்கு மட்டுமே 45.5 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் கெஜ்ரிவாலின் இல்லத்தை மேம்படுத்த வியட்நாம் நாட்டிலிருந்து பளிங்கு கற்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 6 கோடி ரூபாய் செலவில் அவை பொருத்தப்பட்டுள்ளன. இல்லத்தின் அலங்காரங்களுக்காக மட்டுமே 11 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் இல்லத்தில் அலங்காரங்களுக்கான ஆலோசனையை பெறுவதற்கு மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. சமையலறையை மேம்படுத்த ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளது” என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பான பாஜக குறிப்பிடும் அரசு ஆவணங்களில், “2020 ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் (கொரோனா பெருந்தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்திய சமயத்தில்) முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தை மேம்படுத்த 7.91 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதேபோல 2021 ஆம் வருடத்தில் ஜூன் மாதத்தில் 1.64 கோடி ரூபாய்; அக்டோபர் மாதத்தில் 9.08 கோடி ரூபாய்; மற்றும் டிசம்பர் மாதத்தில் 5.73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2022 ஆம் வருடம் ஜூன் மாதத்தில் முதல்வர் இல்ல மேம்பாட்டுக்காக 9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் குறிப்பிட்டு முதல்வர் இல்லத்தில் அமைந்துள்ள அலுவலகத்தை மேம்படுத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியும், கெஜ்ரிவால் மக்களின் வரிப்பணத்தை ஆடம்பரமாக வீணடித்துள்ளார் என கண்டனம் தெரிவித்துள்ளது. ‘ஆரம்பத்தில் அரசு பங்களா மற்றும் அரசு வாகனம் போன்ற வசதிகளை பயன்படுத்த மாட்டோம் என தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது மக்களின் வரிப்பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறார்’ என இரண்டு கட்சிகளும் விமர்சனம் செய்துள்ளன.

காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன், “சாதாரண மக்களின் கட்சியாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் இப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ்வது ஏமாற்று வேலை” என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பொய்களைப் பேசி மக்களை ஏமாற்றி வரும் கெஜ்ரிவால் முகத்திரை கிழிந்து விட்டது என அவர் விமர்சனம் செய்துள்ளார்.

பாஜகவின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, “இந்த ஆடம்பர செலவு ஆம் ஆத்மி கட்சியின் உண்மைகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது” என்றுள்ளார். பாஜக சார்பில் போராட்டமும் நடந்தது.

இக்குற்றச்சாட்டுகளுக்கு, ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா “முதல்வரின் அரசு பங்களா மிகவும் பழையது. ஆகவே அதை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாட்டின் பிற முதல்வர்கள் தங்களுடைய இல்லங்களை புனரமைக்க என்ன செலவு செய்கிறார்கள் என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்” என விளக்கம் அளித்துள்ளார்.