கர்நாடகா தேர்தல்: ‘உச்சநீதிமன்ற உத்தரவு பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்’ - தினேஷ் குண்டுராவ்

கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்துசெய்யும் முடிவு மே 9ம் தேதி வரை அமல்படுத்தக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கருத்து
தினேஷ் குண்டுராவ்
தினேஷ் குண்டுராவ்கோப்புப் படம்

கா்நாடக மாநிலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் இஸ்லாமியர்களுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு என்பது வழங்கப்பட்டு வந்தது. கடந்த 30 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த நடைமுறையை அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு கடந்த மாா்ச் 24-ம் தேதி மாற்றி அமைத்தது. அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்து முடிவெடுக்கப்பட்டது.

தினேஷ் குண்டுராவ்
அமைச்சர் வீடு அமைந்திருக்கும் பகுதியில் 2 ஆண்டுகளாக தரமற்ற சாலை - 6 வயது சிறுவன் வெளியிட்ட வீடியோ!

இஸ்லாமியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை, அம் மாநிலத்தின் மிக முக்கியமான வாக்கு வங்கிகளான ஒக்கலிகர், லிங்காயத் சமூகத்தினருக்கு கூடுதல் இடஒதுக்கீடாக பிரித்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது தற்காலிகமாக இந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட முடிவை செயல்படுத்த மாட்டோம் என கர்நாடகா அரசு உறுதியளித்திருந்தது.

இதற்கிடையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்கினை மே 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், அதுவரை இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கர்நாடகா அரசு அமல்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கர்நாடகா சட்டமன்றத்திற்கு வரும் மே பத்தாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மத ரீதியிலான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடக மாநில சட்டமன்ற பிரச்சாரத்தில் பேசி இருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரும், கர்நாடக மாநிலம் காந்தி நகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான தினேஷ் குண்டுராவ் புதிய தலைமுறைக்கு அளித்தப் பேட்டியில், “இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன். இது பாஜகவுக்குப் பெரும் பின்னடைவாக இருக்கும். தற்போது, கர்நாடகாவில் நடைபெற உள்ள தேர்தலிலும் உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலிக்கும் என நம்புகிறேன். நாட்டில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கும் கிடைக்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்து மீண்டும் 4 சதவீத இடஒதுக்கீட்டை தர நினைத்தோம். அதற்குள் உச்சநீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com