தேர்தல் pt web
இந்தியா

பிகார் | சட்டப்பேரவை தேர்தல் எப்போது?

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் அக்டோபர் முதல் வாரம் அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PT digital Desk

பிகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தின் ஆட்சிக்காலம் நிறைவு பெறும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில், பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் தேதிகள் தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வெளியாகி வருகின்றன. முதற்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறலாம் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

Nitish Kumar

2015 முதல் அரியணையில் இருக்கும் நிதிஷ்குமார், மூன்றாவது முறையும் ஆட்சியில் நீடிக்க, வியூகம் வகுத்துள்ள அவர், மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணியில் நீடிக்கிறார். இந்தக் கூட்டணிக்கு எதிராக, தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துள்ளன. இவ்விரண்டு கூட்டணிக்கும் எதிராக, தேர்தல் வியூக வித்தகரான பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளது.

2023 ஆம் ஆண்டு நிதிஷ்குமார் தலைமையிலான அரசு நடத்திய சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால், மக்களின் விருப்பமாக எந்தக் கட்சி இருக்குமென்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பின்படி பிகாரில் இருக்கும் மக்களில்,

மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBCs): 36.01%

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBCs): 27.12%

பட்டியலின மக்கள் (SCs): 19.65%

பொது வகுப்பு (General Category): 15.52%

பட்டியலின பழங்குடி மக்கள் (STs): 1.68%

Tejashwi Yadav

இந்நிலையில், பெரும்பாலான அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகள் கூட சாதிவாரி கணக்கெடுப்பின்படி மாற்றமடைந்திருக்கிறது. அதேவேளையில், முதலமைச்சர் வேட்பாளருக்கான முகமாக தேஜஸ்வி முன்னிலையில் இருக்கிறார். 24% பேர் நிதிஷ் குமாரை மீண்டும் முதலமைச்சராகப் பார்க்க விருப்பம் தெரிவித்திருந்தாலும், 33.5% பேர் தேஜஸ்வி தங்கள் தேர்வு என்று கூறியுள்ளனர். ஜூலை மாத கருத்துக்கணிப்பில் நிதீஷுக்கு 25% ஆதரவு இருந்த நிலையில்,அது செப்டம்பரில் 24% ஆகக் குறைந்துள்ளது. மாறாக, தேஜஸ்வியின் ஆதரவு சிறிதளவு உயர்ந்துள்ளது – ஜூலை மாதத்தில் 32.1% இருந்தது, செப்டம்பரில் 33.5% ஆக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் 12.4% மக்கள் பிரசாந்த் கிஷோர் அடுத்த முதலமைச்சராக வர வேண்டும் எனக் கருதினார்கள்; இந்த எண்ணிக்கை செப்டம்பரில் 13.7% ஆக உயர்ந்துள்ளது.

2020ஆம் ஆண்டிலும் தேர்தல்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலேயே நடைபெற்றன. ஆனால் அப்போது மூன்று கட்டங்களாக நடந்தன – அக்டோபர் 28ஆம் தேதி 71 தொகுதிகள், நவம்பர் 3ஆம் தேதி 94 தொகுதிகள், நவம்பர் 7ஆம் தேதி 78 தொகுதிகள். முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்நிலையில், தற்போதைய தேர்தல் தேதியை அக்டோபர் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல், 2 கட்டங்களாக நடத்தப்படக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.