பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 900க்கும் மேற்பட்ட மையங்களில் ஏறக்குறைய ஐந்து லட்சம் விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுதினர். இதில், பாட்னாவில் உள்ள தேர்வு மையம் ஒன்றில், வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறி நூற்றுக்கணக்கான தேர்வர்கள் தேர்வைப் புறக்கணித்தனர்.
இந்தத் தேர்வில் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும், குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தேர்வு முறைகேட்டைக் கண்டித்து பாட்னாவில் இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததுடன், 10,000க்கும் மேற்பட்ட விண்ணப்பத்தாரர்களுக்கு மறு தேர்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது. ஆனாலும், இதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு பிரபல தேர்தல் வியூகருமான, ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனமான பிரசாந்த் கிஷோரும் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டார். இதையடுத்து, மாணவர்கள் மீதும் பிரசாந்த் கிஷோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் மாணவர்களிடம் பேச உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அரசுப் பணியாளர் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். பாட்னா காந்தி மைதானத்தில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கிய அவரது, இன்று காலைவரை ஐந்தாவது நாளாக நீடித்தது. இந்த நிலையில், தடைசெய்யப்பட்ட பகுதியில் அவர் போராட்டம் நடத்தியது சட்டவிரோதமாக கருதப்பட்டது. இதையடுத்து அவரை வேறு இடத்தில் போராட்டம் நடத்த காவல் துறை தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அங்கு செல்லாததால், இன்று கைது செய்யப்பட்டார். மேலும், அவர் கைது செய்யப்பட்ட உடனேயே , மருத்துவப் பரிசோதனைக்காக பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், ’பிரசாந்த் கிஷோர் எதிர்காலத்தில் எந்த ஒரு போராட்டத்திலும் பங்கேற்கக் கூடாது’ என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பிபிஎஸ்சி ஜனவரி 4 ஆம் தேதி மறுதேர்வை நடத்தியது. இதில் தகுதி பெற்ற 12,012 பேரில் 5,943 பேர் மட்டுமே தேர்வெழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.