பீகார் | வினாத்தாள் கசிவு விவகாரம்.. அரசுக்கு எதிராக உண்ணாவிரதத்தைத் தொடங்கிய பிரசாந்த் கிஷோர்!
பீகார் மாநிலத்தில் கடந்த 13ஆம் தேதி அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 900க்கும் மேற்பட்ட மையங்களில் ஏறக்குறைய ஐந்து லட்சம் விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுதினர். இதில், பாட்னாவில் உள்ள தேர்வு மையம் ஒன்றில், வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறி நூற்றுக்கணக்கான தேர்வர்கள் தேர்வைப் புறக்கணித்தனர். இந்தத் தேர்வில் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும், குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், தேர்வு முறைகேட்டைக் கண்டித்து பாட்னாவில் இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததுடன், 10,000க்கும் மேற்பட்ட விண்ணப்பத்தாரர்களுக்கு மறு தேர்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது.
ஆனாலும், இதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தேர்வு முறைகேட்டைக் கண்டித்து, பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் திரண்டிருந்த மாணவர்கள், முதல்வர் நிதிஷ்குமார் இல்லம் நோக்கி பேரணியாகச் செல்லத் திட்டமிட்டனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கிடையே அனுமதியின்றி கூடியதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்த பிரபல தேர்தல் வியூகருமான, ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனமான பிரசாந்த் கிஷோருக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் மாணவர்களிடம் பேச உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், அரசுப் பணியாளர் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.
மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துவந்த பிரசாந்த் கிஷோர், தற்போது தேர்வர்களுக்கு ஆதரவாக உரிய நீதி கிடைக்க வேண்டி பாட்னா காந்தி மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். முதல் நிலைத் தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தவறிவிட்டதாகவும் கூறி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து பிரசாந்த் கிஷோர், “கடந்த 16 நாட்களில் மாணவர்களை நேரில் சந்திக்க முதல்வர் மறுத்துவிட்டார். இந்த அரசாங்கம் அனைத்து முனைகளிலும் மாணவர்களை ஏமாற்றியுள்ளது. தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள்கூட இந்த மாணவர்களுக்கு முதலமைச்சரிடம் நியமனம் பெறுவதில் உதவியற்றவர்களாக உணர்கிறார்கள். மாணவர்கள் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை தீரும்வரை நான் இந்த மாணவர்களுடன் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இவ்விவகாரம் தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் உடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இவற்றுக்கு தீர்வு காணபது குறித்த எந்தவொரு நம்பிக்கையையும் தலைமைச் செயலாளர் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.