கடந்த ஆண்டு மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி என பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில், பீகார் மாநிலம் வினாத்தாள் கசிவின் மையமாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வழக்கை ஜூன் 25ஆம் தேதி சி.பி.ஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கில் இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள விடுதி அறையில் எரிந்த நிலையில் ஓ.எம்.ஆர் (OMR) தாள்கள், தேர்வுக்கான சில அனுமதி அட்டைகள் மற்றும் ரூ.2.75 லட்சம் ரொக்கம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பீகாரின் ஆர்யபட்டா அறிவுப் பல்கலைக்கழகம் (AKU) நீட் முதுகலை தேர்வு தேதியை ஒத்திவைத்துள்ளது. முதுநிலை நீட் தேர்வுகளை ஜனவரி 16க்கு ஒத்திவைக்க ஆர்யப்பட்டா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்வு முதலில் நேற்று நடைபெற இருந்தது. மேலும், இத்தேர்வு குறித்த வினாத்தாள் கசிந்துள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தவிர, பாட்னா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் வித்யாபதி சௌத்ரி, வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய மூன்று பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளார்.
இதுகுறித்து பாட்னாவின் பிர்பஹோர் காவல் நிலைய பொறுப்பாளர் முகமது அப்துல் ஹலீம், “ரூ.2.75 லட்சம் மதிப்பிலான எரிந்த கரன்சி நோட்டுகள், நீட் யு.ஜி மற்றும் பி.ஜி தேர்வின் 40 அட்மிட் கார்டுகள், ஆர்யப்பட்டா பல்கலைக்கழகம் நடத்திய எம்.பி.பி.எஸ் தேர்வுகளின் 30 ஓ.எம்.ஆர் தாள்கள், சிம்முடன் கூடிய மொபைல் போன் மற்றும் மதுபான பாட்டில் ஆகியவற்றை பாட்னா மருத்துவக் கல்லூரியின் சாங்க்யா விடுதியில் கண்டுபிடித்தோம்.
இதில், பாட்னா மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர் அஜய் குமார் சிங் மீது வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். சமஸ்திபூரைச் சேர்ந்த அஜய், 2016 முதல் அந்த விடுதியில் தங்கி இருந்துள்ளார். மேலும் அஜய் 2022இல் பட்டம் பெற்ற பிறகும் அங்கேயே தங்கி வந்துள்ளார். விடுதியின் இரண்டு அறைகள் அவரது கட்டுப்பாட்டில் இருந்தன. நீட் யு.ஜி தாள் கசிவு வழக்கில் அஜய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புள்ளாரா என்பதையும் நாங்கள் விசாரித்து வருகிறோம். இந்த வழக்கு தற்போது மத்திய புலனாய்வுப் பிரிவால் விசாரிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.