பீகார் சட்டமன்றத்தில் பதவியேற்ற விழாவில், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ. விபா தேவி பதவிப் பிரமாணத்தை வாசிக்க தடுமாறிய சம்பவம் இணையத்தில் பரவி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. முன்னாள் எம்.எல்.ஏ. மனைவியாக போட்டியிட்ட அவர் நிலையில் தகுதியுள்ளவர்களை புறக்கணித்த கட்சியின் முடிவை மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. மொத்தமுள்ள 243 இடங்களில் 202 இடங்களை அக்கூட்டணி வென்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாரதிய ஜனதா கட்சி 89 இடங்களுடன் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அதைத் தொடர்ந்து ஜனதா தளம் (ஐக்கிய) 85 இடங்களையும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 19 இடங்களையும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) ஐந்து இடங்களையும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா நான்கு இடங்களையும் வென்றன.
இதையடுத்து, அக்கூட்டணிக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு நிதிஷ் குமார் மீண்டும் 10வது முறையாகக் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி பதவியேற்றார். துணை முதல்வர்களாக இரண்டு பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் பதவியேற்றனர். தவிர, மேலும் சில அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்த நிலையில், பீகார் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதன்படி, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர். அந்த வகையில், முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. விபா தேவி என்பவரும் பதவியேற்றார். ஆனால், அவர் பதவிப் பிரமாணத்தை வாசிப்பதில் சிக்கலை எதிர்கொண்டார். ஆம், பதவிப் பிரமாணப் பத்திரத்தில் இருந்த வார்த்தைகளைப் படிக்கவே அவர் தடுமாறினார். மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தொடர்ந்து, அவர் இந்த சிக்கலை எதிர்கொண்ட நிலையில், இறுதியில் தனது உதவியாளர் மூலம் அதை வாசித்து முடித்ததாகத் தெரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முன்னாள் எம்.எல்.ஏ.வும், வலிமைமிக்க தலைவருமான ராஜ் பல்லப் யாதவின் மனைவியான விபா தேவி, பீகாரின் தேவி நவாடா தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) கௌஷல் யாதவை 27,594 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றவராவார். இந்நிலையில், பதவி பிரமாணத்தை வாசிப்பதிலேயே விபா தேவி சிக்கலை எதிர்கொண்ட நிலையில், தகுதியுள்ள பலர் கட்சியில் இருக்கும்போது முன்னாள் எம்.எல்.ஏவின் மனைவி என்பதற்காக போட்டியிடவைத்தால் இப்படித்தான் ஆகுமென்று இணையவாசிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.