பீகார் | பதவியேற்று 5 நாட்கள்தான்.. லாலுவின் வீட்டைக் காலிசெய்ய உத்தரவிட்ட நிதிஷ் அரசு!
பீகாரில், இருபது ஆண்டுகளாக லாலு குடும்பத்தினர் வசித்து வரும் 10 சர்குலர் சாலையில் உள்ள நீண்டகால இல்லத்தை காலி செய்யுமாறு நிதிஷ் அரசு உத்தரவிட்டுள்ளது.
பீகாரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது. முதல்வராக 10வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக லாலு குடும்பத்தினர் வசித்து வரும் 10 சர்குலர் சாலையில் உள்ள நீண்டகால இல்லத்தை காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்குப் பதில் மாநில கட்டடக் கட்டுமானத் துறை, அவர்களுக்கு ஹார்டிங் சாலையில் வீடு ஒன்றை ஒதுக்கியுள்ளது.
நிதிஷ் குமார் அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து பீகாரில் புதிதாக அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் நிர்வாக நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பொறுப்பேற்ற உடனேயே, கட்டிடக் கட்டுமானத் துறை, நெறிமுறை மற்றும் உரிமையின்படி அதிகாரப்பூர்வ குடியிருப்புகளை மறு ஒதுக்கீடு செய்யும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
லாலுவின் மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தற்போது சட்டமன்றக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிப்பதால், அவர் இப்போது வேறு வகை தங்குமிடத்திற்கு உரிமை பெற்றுள்ளார், இதனால் அவருடைய வீடு காலி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, லாலு மற்றும் ராப்ரிதேவி முதல்வர் பதவியில் இருந்தபோது இந்த இல்லம் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த இல்லம் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக லாலு பிரசாத்-ராப்ரி தேவி குடும்பத்தின் அரசியல் மற்றும் தனிப்பட்ட தளமாக செயல்பட்டது. முக்கிய கட்சி முடிவுகள், தலைவர்களை சந்தித்தது மற்றும் ஊடக சந்திப்புகளை நடத்தியது என எல்லாமே இந்த இல்லத்தில்தான். ராப்ரி தேவியின் வீடு மாற்றப்பட்டது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார், கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், “லாலு குடும்பத்தினர் வீட்டை காலி செய்யும்போது, எங்கள் கண்கள் அதன்மீது இருக்கும். மேலும் இந்த நடவடிக்கையின்போது, எந்தவொரு அரசாங்க சொத்தும் எடுத்துச் செல்லப்படாமல் இருப்பதை அரசாங்கம் கண்காணிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, “லட்சக்கணக்கான மக்களின் மெசியாவாக இருப்பவர் லாலு பிரசாத் யாதவ். அதிகாரிகள் அவரை அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து அகற்றினாலும், பீகார் மக்களின் இதயங்களிலிருந்து அவரை எப்படி தூக்கி எறிவீர்கள்? அவரது அரசியல் அந்தஸ்தையும் ஆரோக்கியத்தையும் அரசாங்கம் மதிக்க வேண்டும்” என பதிலடி கொடுத்துள்ளார்.

