ஆண் ஆசிரியருக்கு மகப்பேறு விடுப்பு எக்ஸ் தளம்
இந்தியா

பீகார்: மகப்பேறு விடுப்பு பெற்ற அரசுப்பள்ளி ஆண் ஆசிரியர்... வெளியான ஸ்கிரீன்ஷாட்... வெடித்த சர்ச்சை!

பீகார் அரசுப்பள்ளி ஒன்றின் ஆண் ஆசிரியர், மகப்பேறு விடுப்பு பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஜெ.நிவேதா

பீகாரின் ஹஜிபூர் ப்ளாக் என்ற பகுதியிலுள்ள மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்தவர், ஜிதேந்திர குமார் சிங். இவர் தற்போது விடுப்பில் இருந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் பீகார் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் விடுப்புக் கோரிக்கையை முன்வைப்பதற்கான இ-ஷிக்‌ஷா கோஷ் என்ற இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட, ஜிதேந்திர குமார் எடுத்த விடுப்பு தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

காரணம் அந்த பதிவில், தற்போது ஜிதேந்திர குமார் சிங், மகப்பேறு விடுப்பில் இருந்து வருகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண் ஆசிரியருக்கு எப்படி மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்து, பீகார் கல்வித்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆசிரியரின் மகப்பேறு விடுப்பு ஸ்கிரீன் ஷாட்

இதுதொடர்பான ஸ்கிரீன்ஷாட் வைரலான நிலையில், இதுபற்றி அப்பகுதியில் கல்வி அலுவலர் அர்ச்சனா குமாரி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், “தவறுதலாக குமார் சிங்கின் பெயர் அதில் சேர்க்கப்பட்டு விட்டது. விரைவில் இது சரிசெய்யப்படும்” என்றுள்ளார்.

மேலும் “தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நிகழ்ந்துள்ளது. ஆசிரியரின் விடுப்பு அவர் தகுதியற்ற பிரிவின் கீழ் குறிக்கப்பட்டுள்ளது. பெண் ஆசிரியர்கள் சிலர் விண்ணப்பித்த CLகள் EL களாகக் காட்டப்படுகின்றன. இது குறித்து ஆய்வு செய்து சரிவர நடவடிக்கை எடுக்கப்படும். ஆண் ஆசிரியர்களுக்கும் 15 நாள் விடுப்பு உண்டு. ஆனாலும் அது தனி பிரிவின் கீழ்தான்” என்றுள்ளார்.

பீகாரில் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கு ஆண்களுக்கும் விடுப்பு அளிக்கப்படுகிறது. அதில்தான் ஜிதேந்தர் விண்ணப்பித்திருப்பார் என்றும், தொழில்நுட்ப கோளாறால் தவறுதலாக அது மகப்பேறு விடுப்பாக எடுக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆசிரியர்

கடந்த மாதம்தான், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், “பள்ளிகளில் ஆய்வு நடத்துவதில் அலட்சியம் காட்டப்படுகிறது. அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.