Bihar Elections first Phase Campaign ends pt web
இந்தியா

பரப்புரையின் கடைசி நிமிடத்தில் மக்களை கவர்ந்தது எந்தக் கூட்டணி? பாஜக எடுத்த ’யோகி அஸ்திரம்'

பரப்புரையின் முடிவுகளை எப்படி ஆய்வு செய்தாலும், யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை அறுதியிட்டுச் சொல்லமுடியாத அளவுக்கு பல இடங்களில் நெருக்கமான போட்டி இருக்கும் என்றே அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்

ரா.ராஜா

சில வாரங்களாக திட்டங்கள், வாக்குறுதிகள், குற்றச்சாட்டுகள் என சூடு பறந்த பிஹார் தேர்தலில் முதற்கட்ட பரப்புரை நிறைவடைந்திருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி, பரப்புரையின் கடைசி அஸ்திரமாக யோகி ஆதித்யநாத்தை களமிறக்கிவிட்டது.

அதிரடி அரசியலுக்கு பெயர் பெற்ற உத்தர பிரதேச முதலமைச்சரும், பாஜகவின் நட்சத்திரப் பரப்புரையாளருமான யோகி ஆதித்யநாத் பிஹார் தர்பங்காவில் நடத்திய பேரணி வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருந்தது. ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி, கூட்டணிக்கான ஆதரவை பெருக்கும் வகையில் அவரது பேச்சு அமைத்திருந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் முறையே தர்பங்கா மற்றும் வைஷாலி மாவட்டங்களில் நடந்த பேரணிகளில் பங்கேற்று தேசிய ஜனநாய கூட்டணியின் பலத்தை காட்டும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடியோ, மேரா பூத் சப்சே மஜ்பூத் திட்டத்தின் கீழ், பிஹாரில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெண் பணியாளர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார். இந்தியா கூட்டணி மீதான கடும் விமர்சனங்கள் அவரது பேச்சின் முக்கிய அம்சங்களாக இருந்தன. லாலுவின் அழுத்தம் காரணமாகவே மகா கூட்டணிக்கு தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக மோடி குற்றம்சாட்டினார்.

மறுபுறம் மகா கூட்டணியும் கடைசி நேரப் பரப்புரையை வலுப்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நிதிஷ் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக விமர்சித்தார். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் விஷயத்திலும், பொருளாதார உயர்வை ஏற்படுத்துவதிலும் மகா கூட்டணி முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் வலியுறுத்தினார். நவம்பர் 6ஆம் தேதி, முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், பாட்னாவில் உள்ள விநியோக மையங்களில் தேர்தல் அதிகாரிகள் வாக்குப் பதிவுப் பொருட்களைச் சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

பரப்புரையின் முடிவுகளை எப்படி ஆய்வு செய்தாலும், யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை அறுதியிட்டுச் சொல்லமுடியாத அளவுக்கு பல இடங்களில் நெருக்கமான போட்டி இருக்கும் என்றே அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

பிரசாந்த் கிஷோர்

தொடக்கத்தில் இருபெரும் கூட்டணியுடன் புதிய ஜன் சூரஜ் கட்சியும் தேர்தல் களத்தில் மும்முனைப் போட்டி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜன் சூரஜ் கட்சியின் தாக்கம் குறைந்துவிட்டதால், களத்தில் இரு அணிகளுக்குமிடையே போட்டி இறுக்கமாகிவிட்டது. 2020 சட்டமன்றத் தேர்தலும் இங்கு ஒப்பீடு செய்யப்படுகிறது, அப்போது இரண்டு கூட்டணிகளும் தலா 37% வாக்குகளைப் பெற்றன. இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 0.03% தான். ஆனால், இந்த சொற்ப வாக்குப் பங்கீடு வித்தியாசமே தேஜகூ 125 இடங்களையும், மகாகட்பந்தன் 110 இடங்களையும் கைப்பற்ற வழிவகுத்தது. இதே நிலைதான் 2025-லும் தொடர்வதாக தெரிகிறது. சிராக் பாஸ்வானின் சுமார் 6% வாக்குகளை தேஜகூ சேர்த்துக் கொள்கிறது, அதேசமயம் முந்தைய தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த முகேஷ் சஹானியின் சுமார் 3% வாக்குகள் இந்த முறை இந்தியா கூட்டணி பக்கம் சாய்கிறது.

amit shah, Nitish Kumar

இதனால், இரு கூட்டணிகளின் வாக்கு சதவீதமும் 40% அளவில் நெருக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஒரு சதவீத வாக்குகளின் ஊசலாட்டம் கூட முடிவைத் தலைகீழாக மாற்றும். உள்ளிருக்கும் எதிரியாக இரு கட்சிகளிலும் உள்ளடி வேலைகள் இருக்கின்றன. வெளியில் இரண்டு கூட்டணிகளும் ஒற்றுமையைப் பறைசாற்றினாலும், நிஜத்தில் இரண்டு அணிகளுக்குள்ளும் சந்தேகமும் உள்ளடி சண்டைகளும் தொடரத்தான் செய்கின்றன. மகா கூட்டணிக் கட்சிகள் குறைந்தது 11 தொகுதிகளில் பொதுவான எதிராளியான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் போட்டியிடுவதை விட்டுவிட்டு , கூட்டணிக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன.

bihar election 2025

பிஹாரில் உள்ள 7.4 கோடி வாக்காளர்களில் சுமார் 3.5 கோடி பேர் பெண்கள் ஆவர். 2010 முதல், பெண்களின் பெருமளவு ஆதரவு நிதிஷ் குமார் தொடர்ந்து ஆட்சியில் நிலைக்க காரணமாக அமைந்தது. இருப்பினும், இந்த முறை தேஜஸ்வி யாதவ், மாத ஊதியம் ரூபாய் 30,000, பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் நிதியுதவி என கவர்ச்சி மிகு வாக்குறுதிகளை தந்துள்ளார். இது வாக்காளர்களின் கவனத்தை அவருக்கு ஆதரவாகத் திருப்பக்கூடும். இரு கூட்டணிகளுக்கும் இடையே நேரடியான, நெருக்கடியான போட்டி இருக்கும் என்றாலும் ஒரு சதவீத வாக்கு கூட பெரும் மாற்றத்தை நிகழ்த்தும் என்ற நிலையில் இருக்கிறது பிஹார் அரசியல் களம்