பீகார் தேர்தல் களம் pt web
இந்தியா

Bihar Exit Polls | என்ன சொல்கின்றன தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்? - விரிவான அலசல்

முதல் கட்டத்தில் தேஜஸ்வி வெற்றி உறுதி போல இருந்தது... ஆனால் இரண்டாம் கட்டம் எல்லாம் மாறிவிட்டது! பீகாரில் பாஜக மற்றும் நிதிஷ் குமார் கூட்டணி மீண்டும் மாயஜாலம் புரிந்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

rajakannan

முதல் கட்டத்தில் தேஜஸ்வி-க்கு ஆதரவு அலை எழுந்ததுபோல் தோன்றியிருந்தாலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்குப் பின் கள நிலைமைகள் மாறியிருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்பதை கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியா கூட்டணி சறுக்கியது எங்கே.. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பலம் கூடியது எங்கே என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ளது. முதல் கட்ட தேர்தலில் 66 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலில் 67.14 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஆட்சியைப் பிடிக்க 122 இடங்கள் தேவை.

நிதிஷ் குமார், மோடி

இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தேசிய ஜனநாயக கூட்டணி எவ்வித சிக்கலும் இல்லாமல் மெஜாரிட்டி பெற்று வெற்றி பெறும் என்று கூறுகின்றன. குறிப்பாக, பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கட்சிக்கு 140 முதல் 160 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் ராஷ்டிர ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மகாகட்பந்தன் அதாவது, இந்தியா கூட்டணிக்கு 70 முதல் 100 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. முன்னதாக முதற்கட்ட தேர்தலுக்கு பிறகு தேஜஸ்வி கை ஓங்கி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், கண்டிப்பாக போட்டி கடுமையாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு பிறகு நிலைமை முற்றிலும் மாறியுள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தேஜ கூட்டணியின் பலம் எங்கே? மாககட்பந்த சறுக்கியது எங்கே?

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போட்டியிட்ட நிலையில், பாஜகவுக்கு 70-80 இடங்கள் வரையும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 60-70 இடங்கள் வரையும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அதனால், இரு கட்சிகளும் சமபலம் வாய்ந்த நிலையில் இருப்பதை கணிப்புகள் காட்டுகின்றன.

ராகுல் காந்தி - தேஜஸ்வி யாதவ்

ஆனால், மகாகட்பந்தனை பொருத்தவரை ராஷ்டிர ஜனதா தளம் மட்டுமே 60 முதல் 80 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்புள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சியோ 5 முதல் 15 இடங்களில்தான் வெற்றி பெறும் எனக் கணிப்புகள் கூறுகின்றன. மகாகட்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரியா தள ஜனதா தளம் 143 தொகுதிளிலும், காங்கிரஸ் கட்சி 61 இடங்களிலும் போட்டியிட்டன. ராஷ்டிர ஜனதா தளம் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் பாதிக்கு மேல் வெற்றி பெற வாய்ப்புள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியோ மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றதை கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. காங்கிரஸ் கட்சியும் 30 இடங்களுக்கு மேல் பிடிக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், போட்டியானது கடுமையானதாக இருந்து அதனால் வாக்குகள் சிதறியிருக்கலாம்.

ஜன் சுவராஜ் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்குமா?

இந்த தேர்தலின் தொடக்கத்தில் மிகப்பெரிய அளவில் பரப்புரையை மேற்கொண்டு லைம்லைட்டில் இருந்து வந்தது பிரசாந்த் கிஷோரின் ஜன் சுவராஜ் கட்சி. ஆனால், பாதிக்கு மேல் நிலைமை மாறியது. களம் மீண்டும் தேஜகூ, மகாகட் பந்தன் இடையே மட்டுமானதாக மாறியது. அதனால், கடைசி நேரத்தில் ஜன் சுவராஜ் பற்றிய பேச்சே பெரிய அளவில் இல்லை. அவரும் போட்டியிடவில்லை.

பிரசாந்த் கிஷோர்

இந்நிலையில், தற்போது கருத்துக்கணிப்பு முடிவுகளும் எதிர்பார்த்தபடியே ஜன் சுவராஜ்-க்கு சொல்லும்படியாக தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிவிக்கவில்லை. ஓரிரு இடங்கள் கிடைக்கலாம் என்றே கணிப்புகள் கூறுகின்றன. ஆனாலும் இங்கே ஒரு சிக்கல் இருக்கின்றது. ஒருவேளை ஜன் சுவராஜ் கட்சி 5 சதவீதம் வாக்குகளுக்கு மேல் பிடிக்குமானால், அது யாருடைய வாக்குகள் என்பதுதான் கேள்வி. ஆளும் கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலையை ஜன் சுவராஜ் அறுவடை செய்திருக்கவே வாய்ப்புகள் உள்ளன. எனவே, மகாகட்பந்தன் கூட்டணிக்கே அவரது வாக்குகள் பாதகமாக அமைந்திருக்கலாம்.

கடந்த ஆண்டு போலதான்.. ஆனால் சிறிய மாற்றம்!

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 144 இடங்களில் போட்டியிட்ட ராஷ்டிர ஜனதா தளம் கட்சி, 75 இடங்களை பிடித்தது. 110 இடங்களில் போட்டியிட்ட பாஜக, 74 இடங்களில் வென்றிருந்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியோ 115 இடங்களில் போட்டியிட்டு 43 இடங்களில் வென்றிருந்தது. காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் 19 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. ஆர்.ஜே.டிதான் 23.5 சதவீதம் வாக்குகளுடன் முதலிடத்தில் இருந்தது. பாஜகவுக்கு 19.08 சதவீதமும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 15.7 சதவீதமும் கிடைத்தன. காங்கிரஸுக்கு 9.6 சதவீதம் வாக்குகள் கிடைத்திருந்தன.

நிதிஷ்குமார்

கடந்த தேர்தலைப்போல இந்த முறையும் ஆர்.ஜே.டி மற்றும் பாஜக இரண்டும் சம அளவுக்கு இடங்களில் வெற்றிபெற வாய்ப்புகள் இருப்பதாக கணிப்புகள் கூறுகின்றன. ஆனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு இந்த முறை கூடுதலாக 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன. இதுதான் தேசிய ஜனநாயக கூட்டணி ஸ்வீப் அடிப்பதற்கு காரணமாக அமைகிறது. அதாவது, நிதிஷ் குமாரின் செல்வாக்கு கூடியுள்ளதையே இந்த கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. அதேபோல், காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்பதும் மேலும் சரிவைச் சந்தித்து வருவதையே கணிப்புகள் காட்டுகின்றன.