பீகாரில் இஸ்லாமிய பெண் மருத்துவருக்கு பணி ஆணை வழங்கியபோது, அவருடைய ஹிஜாபை முதல்வர் நிதிஷ் குமார் இழுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். இந்த நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் மருத்துவர் ஒருவரின் ஹிஜாபைக் கழற்றுவது போன்ற ஒரு காணொளி வெளியானது. இது, சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவில் உள்ள முதல்வரின் செயலகமான 'சம்வாத்'தில் ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, பீகார் அரசு அமைச்சர்கள் விஜய் குமார் சவுத்ரி, சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு 1,283 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. அவர்களில் 10 பேருக்கு நியமனக் கடிதங்களை நிதிஷ் குமார் வழங்கினார், மீதமுள்ளவர்கள் ஆன்லைனில் பெற்றனர். அதில் மருத்துவர் நுஸ்ரத் பர்வீன் அழைக்கப்பட்டபோது, அவர் ஹிஜாப் அணிந்து வந்திருந்தார். அப்போது அந்தப் பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றும்படி சைகை காட்டினார். அந்தப் பெண் ஹிஜாப்பை அகற்றும் முன்பே, நிதிஷ் குமார் ஹிஜாப்பை பிடித்து கீழே இழுத்தார். நிதிஷ் குமார் இப்படிச் செய்வார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அருகே துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி இருந்தார். அவர் நிதிஷ்குமாரை தடுக்க முயல்வதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இக்காணொளி இணையத்தில் வைரலான நிலையில், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, "நிதிஷ் ஜிக்கு என்ன ஆச்சு? அவரது மனநிலை இப்போது முற்றிலும் பரிதாபகரமான நிலையை அடைந்துவிட்டதா அல்லது நிதிஷ் பாபு இப்போது 100% சங்கியாக மாறிவிட்டாரா" என எதிர்க்கட்சியான ஆர்ஜேடி பதிவிட்டுள்ளது. இதுதொடர்பாக பதிவிட்ட காங்கிரஸ், இந்தச் செயலுக்காக முதல்வர் பதவி விலக வேண்டும் எனக் கோரியுள்ளது.
அது, “ஒரு பெண் மருத்துவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற வந்தபோது, நிதிஷ் குமார் தனது ஹிஜாபை இழுத்தார்.பீகாரில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் இதுபோன்ற இழிவான செயல்களை வெளிப்படையாகச் செய்கிறார். மாநிலத்தில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்? இந்த இழிவான செயலுக்கு நிதிஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இந்த அநாகரிகம் மன்னிக்க முடியாதது” எனத் தெரிவித்துள்ளது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி, "இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது, மேலும் ஒரு பெண்ணின் முகத்திரையை வலுக்கட்டாயமாக இழுப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரால் ஒரு பெண்ணைப் பகிரங்கமாக துன்புறுத்துவதைத் தவிர வேறில்லை" எனப் பதிவிட்டுள்ளார்.