தென்னிந்தியாவின் தொழிற்துறை வரைபடம் வேகமாக மாறத் தொடங்கியிருக்கிறது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு முதலீடுகளை ஈர்ப்பதில் காட்டிவரும் தீவிரம் இந்திய அளவில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும், ஆந்திர மாநில முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் (SIPB) வாயிலாக 4.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 111 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தரவு மையம் போன்ற பிரம்மாண்ட நிறுவனங்களின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் என நவீன கால முதலீடுகளைச் சிறப்புத் திட்டமிடலுடன் ஆந்திரா ஈர்த்துவருகிறது. தொழில்துறையைத் தாண்டி, போலவரம் நீர்த்திட்டம் என ஆந்திராவை அடுத்த கட்டத்துக்கு தயார் செய்துவருகிறார் சந்திரபாபு நாயுடு.
உலகளவில் இரண்டாவது மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனமான HD Hyundai Heavy Industries, கடந்த ஆண்டு டிசம்பரில் தூத்துக்குடியில் வளாகம் அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. ஆனால், இன்றைக்கு ஆந்திர அரசு காக்கிநாடா துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ள நிலத்தைக் காட்டி, அதே 4 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தைத் தங்கள் மாநிலத்திற்கு ஈர்க்கத் தீவிரமாகக் காய்களை நகர்த்திவருகிறது.
இன்றைய தொழில் உலகிற்கு வேகமான நில ஒதுக்கீடு, தடங்கலற்ற ஒற்றைச் சாளர அனுமதி, உடனடிப் பயன்பாட்டிற்கான உள்கட்டமைப்பு மற்றும் குறைந்த நிர்வாகச் சிக்கல்கள் மட்டுமே முதன்மையான தேவைகளாக உள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதோடு கடமை முடிந்துவிடாமல், அவை விரைவாகத் தரையில் இறங்கி வேலைவாய்ப்புகளாக மாறுகிறதா என்பதைக் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்கிறார் இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசியத் தலைவர் கே.இ. ரகுநாதன்.
தென்மாநிலங்களிடையே தொழில் போட்டி கடுமையாகிவரும் இந்த வேளையில், தமிழகம் தனது பாரம்பரியத் தொழில் பலத்தோடு நின்றுவிடாமல், அதிநவீனத் தொழிற்துறை மாற்றங்களுக்கு ஏற்ப கூடுதல் வேகம் காட்ட வேண்டும். குறிப்பாக ஏஐ, தரவு மையங்கள் போன்ற எதிர்காலத் தொழில் பிரிவுகளில் முதலீடுகளைப் பாதுகாக்கவும், புதிய வாய்ப்புகளைக் கைப்பற்றவும் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்கின்றனர் தொழில்துறை நிபுணர்கள்.