திரவுபதி முர்மு எக்ஸ் தளம்
இந்தியா

பாரதிய வாயுயான் விதேயக் மசோதா| குடியரசுத் தலைவர் ஒப்புதல்.. விரைவில் சட்டம் அமல்!

'பாரதிய வாயுயான் விதேயக் 2024’ என்ற புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

Prakash J

இந்தியாவின் ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்து விதிமுறைகளை மாற்றி அமைப்பதற்காக 90 ஆண்டுகால விமானச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மசோதாவை, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு மக்களவையில், கடந்த ஜூலை 31ஆம் அறிமுகம் செய்தார். இந்த மசோதாவுக்கு, ’பாரதிய வாயுயான் விதேயக்’ எனப் பெயரிடப்பட்டது. மக்களவையில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி நிறைவேறிய இந்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் நேற்று ஒப்புதல் அளித்த நிலையில், இந்த மசோதா சட்டமாக அமலாகவுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் எளிதாக வணிகம் செய்வதற்கான ஏற்பாடுகளை வழங்குவதற்காக, தற்போதுள்ள விமானச் சட்டம் 1934இல் திருத்தம் செய்து அதற்குப் பதிலாக பாரதிய வாயுயான் விதேயக் மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், புதிய சட்டங்களுக்கு பெயர் வைப்பதன் மூலம், இந்தி திணிப்பைச் செய்து வருகிறது என்கிற குற்றச்சாட்டுகளையும் எதிர்க்கட்சிகள் வைத்துள்ளன.

முன்னதாக, ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை இந்தி மொழியில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி நள்ளிரவு முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.