‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது வருகிறது. டிசம்பர் 20ஆம் தேதிவரை நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தொடரில், மத்திய அரசு 16 மசோதாக்களை நிறைவேற்ற பட்டியல் இட்டுள்ளது. ஆனால், அதானி விவகாரத்தை காங்கிரஸ் கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபடுவதுடன், முடக்கியும் வருகின்றன. இந்த நிலையில், டெல்லியில் இன்று, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் இந்த மசோதாவைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. அதேநேரத்தில், எதிர்க்கட்சியினர் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை அமல்படுத்தக் கூடாது என திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஆராய்ந்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அப்போது, அரசமைப்பு சட்டத்தின் 3 பிரிவுகளில் மற்றும் 12 உப பிரிவுகளில் திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல், சட்டப்பேரவைகள் உள்ள யூனியன் பிரதேசங்கள் குறித்த சட்டங்களிலும் திருத்தம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு மூன்று சட்டங்களை கொண்டுவருவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இவற்றில் இரண்டு சட்டங்கள் அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக இருக்கும்.
1) முதலாவது சட்டம் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒன்றாக நடத்துவதற்கு அரசமைப்பு திருத்த சட்டமாக இருக்கும்.
2) இரண்டாவதாக, உள்ளாட்சித் தேர்தல்களை மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுடன் இணைத்து நடத்துவதற்கு வசதி செய்யும் அரசமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு 50 விழுக்காடு மாநிலங்களின் ஒப்புதல் தேவைப்படும்.
3) மூன்றாவதாக புதுச்சேரி, டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கான பதவிக் காலத்தை மற்ற சட்டப்பேரவை பதவிக்காலத்துடன் ஒத்திருக்கும்படி மாற்ற ஒரு சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.