model image x page
இந்தியா

பெங்களூரு | குடிநீரை வீணாக்கினால் ரூ.5,000 அபராதம்.. நகர குடிநீர் வாரியம் உத்தரவு!

பெங்களூருவில் குடிநீரை வீணாக்கினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நகர குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது.

Prakash J

அண்டை மாநிலமான கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்த நிலை, நடப்பாண்டில் வராமல் இருக்க நகர நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க முன்கூட்டியே பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் பயன்பாட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, பெங்களூருவில் குடிநீரை வீணாக்கினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நகர குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீரை கொண்டு வாகனங்களை கழுவுவது, தோட்டங்களுக்கு தண்ணீர் விடுவது, கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மால் மற்றும் சினிமா தியேட்டர்களில் குடிநீர் அல்லாத மற்ற தேவைகளுக்கு குடிநீரை பயன்படுத்துவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது.

மாதிரிப் படம்

அதேபோல சாலைகளைச் சுத்தம் செய்வது மற்றும் சாலை கட்டுமான பணிகளுக்கும் குடிநீரை பயன்படுத்தக் கூடாது. இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மீறினால் நாளொன்றுக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் கட்ட வேண்டிவரும். மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதுபோல யாரேனும் குடிநீரை வீணடிப்பதை பார்த்தால் உடனடியாக 1916 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என ஐ.ஐ. எஸ்.சி. இந்திய அறிவியல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.