Delhi Terror Car x page
இந்தியா

டெல்லி கார் குண்டுவெடிப்பு | 3 மணி நேரம் காத்திருப்பு.. செங்கோட்டைதான் குறியா? திடுக்கிடும் தகவல்!

செங்கோட்டை அருகே வெடித்த கார், மூன்று மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Prakash J

டெல்லி செங்கோட்டையில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. செங்கோட்டை அருகே வெடித்த கார், மூன்று மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

செங்கோட்டைக்கு வந்த ஹரியானா கார்

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் மருத்துவர் ஒருவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து 350 கிலோகிராம் அம்மோனியம் நைட்ரேட் ரக வெடிபொருட்களும் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மருத்துவர் ஷகீல் அகமதுவுடன் இன்னும் சிலரும் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர். இந்த நிலையில்தான் டெல்லி செங்கோட்டை சிக்னல் அருகே வெடித்த கார், நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்திருப்பதுடன், 20 பேர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கும்பலுக்கும், வெடித்துச் சிதறிய கார் கும்பலுக்கும் தொடர்பிருக்கலாம் என்கிற கோணத்தில் புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்த விபத்தில் ஹரியானா நம்பர் பிளேட் கொண்ட கார் பயன்படுத்தப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

delhi car blast

தற்போது அதன் தொடர்ச்சியாக, ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் இருந்து அந்த வெள்ளை நிற கார் புறப்பட்டதிலிருந்து சுமார் 600 போலீசார் 1,000க்கும் மேற்பட்ட சிசிடிவிகளில் இருந்து காட்சிகளைக் கண்காணித்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற (நவ.10) அன்று காலை 8.13 மணிக்கு பதர்பூரில் உள்ள ஹரியானா-டெல்லி எல்லையில் உள்ள சுங்கச்சாவடியைக் கடந்து, கார் மயூர் விஹார் மற்றும் கன்னாட் பிளேஸ் வழியாகச் சென்று செங்கோட்டைக்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தை அடைந்துள்ளது.

செங்கோட்டை இலக்கா? 3 மணி நேரம் வரை காத்திருந்த கார்!

அதாவது, அந்த கார் பிற்பகல் 3.19 மணிக்கு டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்ததாகவும், மாலை 6.28 மணி வரை காத்திருந்து அதன்பின்னரே வெளியேறி சிக்னலில் வெடிக்கச் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பயங்கரமான கார் குண்டு வெடிப்பைத் தூண்டியதாக நம்பப்படும் மருத்துவர் உமர் முஹம்மது, அருகிலுள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Delhi Terror Car

செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில், காரை வெடிக்கச் செய்வதே அந்த மருத்துவரின் அசல் திட்டமாக இருந்திருக்கலாம் எனவும், அதற்காகவே அவர் மூன்று மணி நேரம் காத்திருந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், வாரத்தில் திங்கட்கிழமைகளில் செங்கோட்டை மூடப்படும் நிலையில், அதை அறிந்திடாத அவர் மணிக்கணக்கில் காத்திருந்ததாகவும், அந்த 3 மணி நேரமும் அவர் காரைவிட்டு இறங்காமல் இருந்ததாகவும், அவர் மட்டுமே காரில் இருந்ததாகவும், காரின் பின் இருக்கையில் குண்டு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

ஆனால், கடைசி வரை அந்த வாகன நிறுத்துமிடத்தில் கூட்டம் சேராததால் விரக்தியில் மாலை 6.28 மணிக்கு காரை எடுத்துக் கொண்டு போய் சிக்னலில், அதாவது 6.52 மணிக்கு அந்தக் குண்டை வெடிக்கச் செய்துள்ளார் என விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர் எதற்காகக் காத்திருந்திருக்கலாம் என்பது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அவர் முதலில் பதர்பூர் சுங்கச்சாவடியிலிருந்து மயூர் விஹாருக்குச் சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து, பழைய டெல்லிக்கு நேரடியாகச் செல்வதற்குப் பதிலாக, அவர் மாற்றுப்பாதையில் சென்று டெல்லியின் மையப்பகுதியான கன்னாட் பிளேஸுக்கு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

delhi blast

இதனால், அவர் டெல்லியின் முக்கிய அடையாளமான அக்ஷர்தாம் கோயில் மற்றும் கன்னாட் பிளேஸைக் குறிவைத்திருக்கலாம் எனவும், அதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு வருவதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விசாரணை வளையத்தில் பல கேள்விகள்!

குறிப்பாக, அவருடைய மாற்றுப் பாதை திட்டம் பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும், உமர் பயன்படுத்தி வந்த செல்போன் 10 நாட்களுக்கு முன்பே அணைக்கப்பட்டு விட்டதாகவும், அது கடைசியாக அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் இருந்ததாகவும் போலீசார் கண்டறிந்துள்ளனர். இதற்கிடையே, அவர் சென்ற பாதையின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், உமர் ஒருமுறகூட தொலைபேசியைப் பயன்படுத்தவில்லை எனத் தெரியவந்துள்ளது. ஒருவேளை, அவர் போனைப் பயன்படுத்தியிருக்காவிட்டால், அவர் மற்ற நபர்களுடன் எப்படி தொடர்பில் இருந்திருக்க முடியும் என்கிற கேள்வியும் எழுகிறது.

Delhi Terror Car

ஆனால், அவர் வேறொரு பர்னர் போனைப் பயன்படுத்தியிருக்கலாம் எனவும் அது கார் வெடிப்பின்போதே வெடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர் காருக்குள் காத்திருந்தபோது, வெடிபொருட்கள் தொடர்புடைய நபர்கள் பற்றிய கைது சம்பவங்களைப் படித்துக் கொண்டிருந்தாகவும் சொல்லப்படுகிறது. இது, அவருக்கு எந்த தாக்கத்தை ஏற்படுத்தியது என தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், இது ஒரு தற்கொலை தாக்குதலாக இருந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும், இவையனைத்தும் நிகழ்வுகளின் சங்கிலியை வெளிப்படுத்தும் விதமாகவும், விசாரணை தொடர்வதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.