அவித்த முட்டை, ஆப்பாயில், ஆம்லெட், பொடி மாஸ் என முட்டைகளை விதவிதமாக உண்ண விரும்புவோரை சற்று அதிர வைத்திருக்கிறது யூடியூபர் ஒருவர் வெளியிட்ட காணொளி. மக்கள் அன்றாடம் உண்ணும் முட்டைகளில், மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய தடை செய்யப்பட்ட ஆண்டிபயாடிக் மருந்துகளின் எச்சங்கள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நைட்ரோஃபியுரான் என்பது கோழி, பன்றி, இறால் போன்று உணவுக்காக வளர்க்கப்படும் உயிரினங்களுக்கு வழங்கப்படும் ஆண்டிபயாடிக் மருந்து. அதேவேளையில், இந்தியா, அமெரிக்கா உட்பட உலகளவில் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் விலங்குகளில் நைட்ரோஃபுரானை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில்தான், நைட்ரோஃபியுரானின் எச்சங்கள் கொண்ட முட்டைகளை உண்டால், அவை உடலில் நீண்ட நாட்கள் தங்கி புற்றுநோய், மரபணு சேதம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தெரியவந்தது என்று கர்நாடகாவைச் சேர்ந்த எகோஸ் எனும் நிறுவனத்தின் முட்டைகளில் இந்த வேதிப்பொருட்கள் இருப்பதாக ஆய்வு நடத்திய தரவுகளோடு யூடியூபர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த அதிர்ச்சி தகவலைத் தொடர்ந்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தும், சந்தைப்படுத்தப்படும் அனைத்து பிராண்டட் மற்றும் பிராண்ட் அல்லாத முட்டைகளையும் சேகரிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்த முட்டை மாதிரிகள் அனைத்திலும் தடை செய்யப்பட்ட நைட்ரோஃபியூரான்ஸ் எச்சங்கள் இருக்கிறதா எனவும் சோதிக்க, பிரத்யேக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் சந்தேக ரேடாருக்குள் சிக்கிய நிறுவனங்களின் முட்டைகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே இந்தப்பிரச்னை குறித்து பேசியுள்ள கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் 124 முட்டை மாதிரிகளை சோதித்ததில் 123 முட்டைகள் தரமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். எனினும் சோதனைகள் தொடர்கின்றன எனக் கூறிய அவர், 5 நாட்களில் ஆய்வு முடிவுகள் தெரியவரும் எனவும் மக்கள் அச்சப்படத்தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.